தேவையானப்பொருட்கள்:
சோள ரவா - 1 கப்
வெங்காயம் - பாதி
பச்சை மிளகாய் - 2
கேரட் - 1
தக்காளி - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - ஒரு சிறு துண்டு
இலவங்கம் - 2
பட்டை இலை - சிறு துண்டு
ஏலக்காய் - 1
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தண்ணீர் - 3 கப்
செய்முறை:
ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் சோள ரவாவைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வரை வறுத்தெடுக்கவும்.
வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை நீளவாக்கில் இரண்டாகக் கீறிக் கொள்ளவும். கேரட், தக்காளி ஆகியவற்றை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு, காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், அதில் சோம்பு, பட்டை, இலவங்கம், பட்டை இலை, ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்க்கவும். பின்னர் அத்துடன் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு விழுது ஆகியவற்றைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியவுடன், கேரட் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கவும். அதன் பின் தக்காளியைச் சேர்த்துக் கிளறி விட்டு, 3 கப் தண்ணீரை விட்டு, உப்பு போட்டு கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் வறுத்து வைத்துள்ள சோளரவாவைக் கொட்டிக் கிளறி விடவும். வாணலியை மூடி வைத்து, மிதமான தீயில் வேக விடவும். அவ்வப் பொழுது மூடியைத் திறந்துக் கிளறி விட்டு, தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்திருந்துக் கிளறி, இறக்கி வைக்கவும்.
சூடாக சடினியுடன் பரிமாறவும்.
பின்குறிப்பு: இதில் பச்சை பட்டாணி, பீன்ஸ், காலிஃபிளவர், உருளைக்கிழங்கு போன்ற காய்களையும் சேர்த்து செய்யலாம்.
முகநூல்