BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Thursday, July 11, 2013

30 வகை ஊறுகாய்

றுகாய் என்றதுமே பலருக்கும் நாக்குச் சப்புக் கொட்டும். புளிப்பு, காரம், எண்ணெய் இவற்றையெல்லாம் சரியான விகிதத்தில் பக்குவமாகக் கலப்பதன் மூலம், அமிர்தமாக ருசிக்கும் ஊறுகாய்க்கு 'ஓ' போடாதவர்கள் மிகக் குறைவு. 'மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டிவிடும்' என்பார்கள். மாங்காய் ஊறுகாய்தான் என்றில்லை... அது என்ன 'ஊறுகாய்' என்றாலும், சத்தம் இல்லாமல் சாப்பாடு உள்ளே இறங்கும்.
உடனடியாக செய்து சாப்பிட, வார, மாத, வருடக் கணக்கில் கெடாமல் வைத்துச் சாப்பிட என வகை வகையாக ஊறுகாய்களை செய்து காட்டி வியக்க வைத்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். உள்ளம் ஏங்கும் ஊறுகாய் வகைகளை செய்து கொடுத்து உங்கள் இல்லத்தினரை உற்சாகத்தில் ஆழ்த்துங்கள்.
உடனடி ஊறுகாய்...
தேங்காய்-வெங்காய ஊறுகாய்
தேவையானவை: சிறிய வெங்காயம் - 8, துருவிய தேங்காய் - அரை கப், நல்லெண்ணெய் - ஒன்றரை கப், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை - 5 (அ) 7 இலைகள், கடுகு - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். கறிவேப்பிலை சேர்த்து, தேங்காய் துருவல், மிளகாய்த்தூள் போட்டு 5 நிமிடம் வதக்கி, இறக்கும்போது எலுமிச்சைச் சாறு சேர்த்து ஒரு முறை கிளறவும்.
சாதத்துடன் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் வைத்து 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

காலிஃப்ளவர் ஊறுகாய்

தேவையானவை: உதிர்த்த, வெந்நீரில் போட்டு எடுத்த காலிஃப்ளவர் - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டேபிள் ஸ்பூன், கடுகு, வெந்தயத்தூள் - தலா அரை டீஸ்பூன் (வெந்த யத்தை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடிக்கவும்), பெருங் காயத் தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டுத் தாளித்து, காலிஃப்ளவரைப் போட்டு வதக்கவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். அடுப்பிலிருந்து இறக்குவதற்கு முன் வெந்தயத்தூள், பெருங்காயத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பயன்படுத்தவும்.

குறிப்பு: இதை ஃப்ரிட்ஜில் வைத்து 5 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.

வாரக் கணக்கில் வைத்து சாப்பிட...
கோங்குரா

தேவையானவை: ஆய்ந்து பொடியாக நறுக்கிய புளிச்சகீரை - 2 கப், தனியா - எண்ணெய் - தலா 2 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன். காய்ந்த மிளகாய் - 10, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தனியா, மிளகாயைப் போட்டு வறுத்துப் பொடி செய்யவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு தாளித்து, நறுக்கிய புளிச்சகீரையைப் போட்டு வதக்கவும். நன்றாக வதங்கியதும் உப்பு, பெருங்காயத்தூள், அரைத்த பொடியை சேர்த்து, சிறிது நேரம் கிளறி இறக்கவும்.
காரமும் புளிப்பும் சேர்ந்து ருசியாக இருக்கும் இந்த கோங்குரா.

தக்காளி ஊறுகாய்

தேவையானவை: செம்பழமாக உள்ள தக்காளித் துண்டுகள் - 2 கப், (தக்காளியை கழுவி துடைக்கவும்), புளி - நெல்லிக்காய் அளவு, மிளகாய்த்தூள் - 4 முதல் 6 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு ஜாடியில் தக்காளித் துண்டுகள், மிளகாய்த்தூள், புளி, உப்பு எல்லாவற்றையும் கலந்து ஒரு நாள் முழுவதும் ஊற விடவும். மறுநாள், அதையெல்லாம் தண்ணீர் விடாமல் மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு தாளித்து, அரைத்த விழுதைக் கொட்டி, சுருள கிளறவும்.
இதையே மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும் வகையில் தயாரிப்பதற்கான செய்முறை:
ஊறிய தக்காளித் துண்டுகளை மட்டும் எடுத்து வெயிலில் காய வைத்து, திரும்பவும் சாறில் வைத்து இப்படி 2,3 நாட்கள் காய வைக்கவும். மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, அரைத்த விழுதைக் கொட்டி சுருள கிளறவும். இது மாதக்கணக்கிலும் கெடாமல் இருக்கும்.
ரொட்டி, சப்பாத்திக்கு தொட்டுச் சாப்பிடலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

மாங்காய்த் துருவல் ஊறுகாய்
தேவையானவை: மாங்காய்த் துருவல் - ஒரு கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், வறுத்துப் பொடி செய்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளித்து, மாங்காய்த் துருவலை சேர்த்து 3 நிமிடம் கிளறவும். இதில் மஞ்சள்தூள், உப்பு, வறுத்து அரைத்த மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறி இறக்கவும்.

மாங்காய் இஞ்சி ஊறுகாய்

தேவையானவை: தோல் சீவி நறுக்கிய மாங்காய் இஞ்சி - ஒரு கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, கடுகு - ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, மாங்காய் இஞ்சித் துண்டுகளின் மேல் கொட்டவும். இதில் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, எலுமிச்சைச் சாறு விட்டுக் கலக்கவும். 3 நாட்களில் நன்றாக ஊறி விடும். பிறகு எடுத்துப் பயன்படுத்தலாம்.

மிக்ஸட் காய்கறி ஊறுகாய்

தேவையானவை: வெண்டைக்காய் - 10, புடலங்காய் துண்டுகள், நறுக்கிய கீரை தண்டு, கேரட் - தலா கால் கப், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 8, துண்டுகளாக்கிய எலுமிச்சம்பழம் - 2, மிளகாய்த்தூள் - 1 (அ) 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற பாத்திரம் ஒன்றில் எல்லா காய்கறிகளையும் போட்டு, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், எலுமிச்சம்பழத் துண்டுகள் சேர்க்கவும். பிறகு, எண்ணெய் விட்டு நன்றாகக் கலந்து, ஊற வைத்துப் பயன்படுத்தவும்.

தயிர் நெல்லிக்காய்

தேவையானவை: முழு நெல்லிக்காய் - 20, கெட்டித் தயிர் - அரை கப், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், கீறிய பச்சை மிளகாய் - 2, பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தைப் போட்டு வறுத்து, நெல்லிக்காய், மஞ்சள்தூள் போட்டு, சிறிது தண்ணீர் விட்டு வதக்கவும். விரலால் லேசாக அமுங்கும் பதம் வரும்போது, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி இறக்கவும். சிறிது ஆறியதும் தயிர் சேர்த்துப் பரிமாறவும்.

தக்காளி-வெங்காய ஊறுகாய்

தேவையானவை: தக்காளித் துண்டுகள் - 2 கப், சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15, காய்ந்த மிளகாய் - 10, புளி - ஒரு சிறிய உருண்டை, நல்லெண்ணெய், மஞ்சள்தூள், கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன். உப்பு - தேவையான அளவு,
செய்முறை: தக்காளி, காய்ந்த மிளகாய், புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கவும். பிறகு, அரைத்த தக்காளி விழுது, மஞ்சள்தூள், , பெருங்காயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி பயன்படுத்தவும்.

மாதக் கணக்கில் வைத்து சாப்பிட...
மாங்காய் இனிப்பு ஊறுகாய்

தேவையானவை: பொடியாக நறுக்கிய (அ) துருவிய மாங்காய், சர்க்கரை - தலா ஒரு கப், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், எண்ணெய் சேர்க்காமல் வறுத்து அரைத்த சீரகம் - 2 டேபிள்ஸ்பூன், கசகசாத்தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு டீஸ்பூன்,

செய்முறை: கொடுத்துள்ள எல்லா பொருட்களையும், ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் போட்டு மெல்லிய துணியால் கட்டவும். வெயிலில் 10 முதல் 20 நாள் வைக்கவும். இதில் உள்ள சர்க்கரை கரைந்து லேகியம் மாதிரி ஆகிவிடும். இந்த பதத்தில் எடுத்து வைக்கவும். மாதக் கணக்கில் கெடாது.
சப்பாத்தி, பூரி, உப்புமா போன்ற டிபன் வகைகளுடன் தொட்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

கடுகு-மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: சிறிய பச்சை மிளகாய் - 20, கடுகுத்தூள் - 3 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - மிளகாய் மூழ்கும் அளவுக்கு (அ) 6 முதல் 8 பழம், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பச்சை மிளகாயைக் கழுவித் துடைத்து, கத்தியால் கீறி, உப்பு, மஞ்சள்தூள், கடுகுத்தூள் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை ஒரு பாத்திரத்தில் போட்டு, கலவை மூழ்கும் அளவுக்கு எலுமிச்சைச் சாறு விட்டு ஊற விடவும். ஒரு வாரம் நன்றாக ஊறியதும் பயன்படுத்தவும்.

எண்ணெய் மாங்காய்

தேவையானவை: காய்ந்த மாங்காய்த் துண்டுகள் - 2 கப், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், நல்லெண்ணய் - தேவையான அளவு, மிளகாய்த்தூள் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாங்காய்த் துண்டுகளை உப்பு போட்டு ஒரு ஜாடியில் 3 நாட்கள் ஊற விடவும். நாலாம் நாள் காயை மட்டும் எடுத்து, வெயிலில் உலர்த்தவும். மாலையில் எடுத்து ஊறிய சாறில் சேர்க்கவும். இதே போல் 2 நாட்கள் செய்யவும். பிறகு இதை நன்றாகக் காயவைத்துப் ஜாடியில் போட்டு வைக்கவும்.
ஊறுகாய் தேவைப்படும்போது, மாங்காய்த் துண்டுகளை சிறிது நேரம் காய வைத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு, சாறை அடுப்பில் வைத்து, 2 கொதி வந்ததும் அதில் மாங்காய்த் துண்டுகளை நனைக்கவும். மிளகாய்த்தூளை சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து, வெந்தயத்தூள் சேர்த்து, ஊறுகாயில் கொட்டி உபயோகிக்கவும்.

பூண்டு ஊறுகாய்

தேவையானவை: தோல் உரித்த பூண்டு - 2 கப், வறுத்த சீரகத்தூள் - கால் கப், மிளகாய்த்தூள் - 4 டேபிள்ஸ்பூன், வெந்தயத்தூள் - கால் கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - அரை கப், கடுகு - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, பூண்டு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் சீரகத்தூள், வெந்தயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி இறக்கவும், உப்பு போட்டு, எலுமிச்சைச் சாறை ஊற்றிக் கலந்து. நன்றாக ஊறியதும் பயன்படுத்தவும்.

கார நெல்லிக்காய் ஊறுகாய்

தேவையானவை: முழு நெல்லிக்காய் - 2 கப், மிளகாய்த்தூள் - அரை கப், வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு தாளிக்கவும். இதில் நெல்லிக்காய், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள் வெந்தயத்தூள், உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்கி, ஆறியதும் ஜாடியில் எடுத்து வைத்துக் கொள்ளவும். 3 நாட்கள் ஊறியதும் பயன்படுத்தலாம்.

புளி-இஞ்சி ஊறுகாய்

தேவையானவை: தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சித் துண்டுகள் - 2 கப், பச்சை மிளகாய் - 15 ( பொடியாக நறுக்கவும்), புளி - எலுமிச்சை அளவு, கடுகு - அரை டீஸ்பூன், வெல்லத்தூள் - ஒரு டீஸ்பூன், எள் - 2 டேபிள்ஸ்பூன் (எண்ணெய் சேர்க்காமல் வறுத்துப் பொடிக்கவும்), தேங்காய் எண்ணெய் (அ) நல்லெண்ணெய் - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியை ஊற வைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டுத் தாளித்து, பச்சை மிளகாய்த் துண்டுகளை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். புளியைக் கரைத்து, புளித் தண்ணீரை இதனுடன் சேர்க்கவும். மேலும் 3 நிமிடம் கொதிக்க விட்டு, இஞ்சித் துண்டுகளைப் போட்டு மிருதுவாகும் வரை கொதிக்க விடவும். உப்பு, எள்ளுப்பொடி, வெல்லத்தூள் சேர்த்து, கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கவும்.

ஸ்டஃப்டு பச்சை மிளகாய் ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகாய் - 20, எள் - 2 டீஸ்பூன், சோம்பு அல்லது சீரகம் - 2 டீஸ்பூன், ஆம்சூர் பவுடர், மஞ்சள்தூள் - தலா அரை டீஸ்பூன், கடுகு - 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விடாமல் சீரகம், எள்ளைப் போட்டு வறுத்துப் பொடிக்கவும். பச்சை மிளகாயை நடுவில் மட்டும் கீறி, 6 மணி நேரம் வெயிலில் வைக்கவும் பிறகு சீரகம் - எள் பொடியுடன், ஆம்சூர் பவுடர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, காய வைத்த பச்சை மிளகாயில் சிறிது சிறிதாக அடைக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். 2, 3 நாட்களில் நன்றாக ஊறி விடும். பிறகு பயன்படுத்தவும்.

எலுமிச்சை விழுது ஊறுகாய்

தேவையானவை: உப்பில் ஊறிய எலுமிச்சை துண்டுகள் - ஒரு கப், மிளகாய்த்தூள் - 4 டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், உப்பு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: நன்றாக உப்பில் ஊறிய எலுமிச்சை துண்டுகளை மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் போட்டு வறுத்து, அரைத்த எலுமிச்சை விழுதைக் கொட்டவும். மஞ்சள்தூள் சேர்த்து, எண்ணெய் மேலே பிரிந்து வரும் வரை கெட்டியாகக் கிளறி இறக்கவும்.

கடாரங்காய் ஊறுகாய்

தேவையானவை: கடாரங்காய் துண்டுகள் - 2 கப், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, கடுகு, பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாரங்காயை சிறிய துண்டுகளாக நறுக்கி, ஒரு ஜாடியில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு வாரம் ஊற விடவும். நன்றாக ஊறியதும், மிளகாய்த்தூள் போட்டு, எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து மேலாக ஊற்றி, கிளறிப் பயன்படுத்தவும்.

பேரீச்சம்பழ ஊறுகாய்

தேவையானவை: பேரீச்சம்பழத் துண்டுகள் - ஒரு கப், முழு நெல்லிக்காய் துருவல் - அரை கப், மிளகாய்த்தூள், உப்பு - தலா ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாப் பொருட்களையும் நன்றாகக் கலந்து ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி வெயிலில் 5 நாட்கள் வைக்கவும். தினமும் எடுத்து ஒரு முறை கிளறி விடவும். நன்றாக அல்வா பதம் வந்ததும் உலர்ந்த பாட்டிலில் போட்டு மூடி வைத்தால் 6 மாதம் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.
சப்பாத்தி, பிரெட்டுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

மிளகாய்பழ ஊறுகாய்

தேவையானவை: பழுத்த பச்சை மிளகாய் - ஒரு கப், புளி - நெல்லிக்காய் அளவு, எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிளகாய்ப்பழத்துடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து அரைத்த விழுதைப் போட்டு 2 நிமிடம் கிளறி இறக்கவும்.

புளியங்காய் இடித்த கார ஊறுகாய்

தேவையானவை: புளியங்காய் - 10, பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புளியங்காயுடன் உப்பு சேர்த்து இடித்து வைத்துக் கொள்ளவும். மிக்ஸியில் கொத்தமல்லி, பச்சை மிளகாயைப் போட்டு கரகரப்பாக அரைக்கவும். இதனுடன் இடித்து வைத்துள்ள புளியங்காய், வெந்தயத்தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றி அரைத்து எடுக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும்.

ஆவக்காய் ஊறுகாய்

தேவையானவை: மாங்காய் - 12 (மாங்காயைக் கழுவி, துணியால் துடைத்து கொட்டையுடன் நான்கு துண்டுகளாக நறுக்கவும்), மிளகாய்த்தூள், கடுகுத்தூள், உப்பு - தலா 400 கிராம், வெந்தயம் - ஒரு டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள் - 2 டீஸ்பூன், நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு அகலமான பாத்திரத்தில் முதலில் மாங்காய்த் துண்டுகளைப் போட்டு, அதில் முதலில் மிளகாய்த்தூள், பிறகு கடுகுத்தூள், உப்பு, வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டுக் குலுக்கி, பிறகு துண்டுகள் மூழ்கும் வரை நல்லெண்ணையை ஊற்றவும். ஒரு வாரம் ஊறியதும் எடுத்துப் பயன்படுத்தலாம்.

முழு எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை: சிறிய எலுமிச்சம்பழம் - 10, வெந்தயத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை கப், கடுகு, பெருங்காயம் - தலா ஒரு டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எலுமிச்சம் பழங்களை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் கொதிக்கும் நீரை பழங்கள் மூழ்கும் அளவுக்கு விட்டு மூடவும். 10 நிமிடம் கழித்து வெளியே எடுத்து, கத்தியால் நான்காக கீறி, உப்பு, மிளகாய்தூள், வெந்தயத்தூள் கலந்து அடைக்கவும். எண்ணெயைக் காய வைத்து கடுகு, பெருங்காயம் தாளித்துக் கொட்டவும். ஒரு வாரம் கழித்து உபயோகப்படுத்தவும்.

கடுகு-எலுமிச்சை ஊறுகாய்

தேவையானவை: எலுமிச்சை துண்டுகள் - 2 கப், கடுகுத்தூள், மிளகாய்த்தூள் - தலா கால் கப், வெந்தயத்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு ஜாடியில் போட்டு, மூழ்கும் அளவுக்கு நல்லெண்ணை விடவும். ஒரு வாரம் கழித்து பயன்படுத்தலாம்.

மாகாளிக் கிழங்கு ஊறுகாய்

தேவையானவை: மாகாளிக் கிழங்கு - ஒரு கப், எலுமிச்சம்பழம் - 1, இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், தயிர் - அரை கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மாகாளிக்கிழங்கை தோல் சீவி நடுவில் இருக்கும் நரம்பை எடுத்துவிட்டு, சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சித் துண்டுகள், உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, ஒரு வாரம் ஊற விடவும். பிறகு தயிர் சேர்த்துப் பயன்படுத்தவும்.

கார நார்த்தங்காய் ஊறுகாய்

தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 2 கப், காய்ந்த மிளகாய் - 10, வெந்தயம் - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மிளகாய், வெந்தயத்தைப் போட்டு சிவக்க வறுத்து, ஆறியதும் மிக்ஸியில் பொடிக்கவும். இந்தப் பொடியை நார்த்தங்காய் துண்டுகளின் மேல் போட்டு, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி, ஊறியதும் பயன்படுத்தவும்.
இந்த ஊறுக்காய் தயிர் சாதத்துக்கு நல்ல காம்பினேஷன்.

வடு மாங்காய்

தேவையானவை: ருமானி (அ) கிளிமூக்கு பிஞ்சு மாங்காய் - 2 கப், கடுகு, மிளகாய்தூள் - 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, விளக்கெண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: மாங்காயை நன்றாகக் கழுவி, துடைத்து, விளக்கெண்ணெயை தடவவும். இதனுடன் மற்ற எல்லாவற்றையும் நன்றாகக் கலந்து, ஜாடியில் போட்டு வைக்கவும். இரண்டு நாளுக்கு ஒரு முறை குலுக்கி விடவும். நன்றாக ஊறியதும் உபயோகப்படுத்தவும்.

பச்சை மிளகு ஊறுகாய்

தேவையானவை: பச்சை மிளகு - 2 கப், இஞ்சித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுத்துள்ள எல்லாவற்றையும் கலந்து, பாட்டிலில் போட்டு, ஒரு வாரம் நன்றாக ஊற விடவும். பிறகு பயன்படுத்தவும்.

வெந்தய மாங்காய் ஊறுகாய்

தேவையானவை: தோல் சீவி, நீளவாக்கில் நறுக்கிய மாங்காய்த் துண்டுகள் - 2 கப், வெந்தயத்தூள் (கடாயில் எண்ணெய் விடாமல் வறுத்து பொடிக்கவும்) - ஒரு டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், வறுத்து அரைத்த மிளகாய்த்தூள் - காரத்துக்கு ஏற்ப, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - தலா அரை டீஸ்பூன், நல்லெண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகைப் போட்டு, வெடித்ததும் சீவி வைத்துள்ள மாங்காய்த் துண்டுகளைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். லேசாக வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், வெந்தயத்தூள் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும். எண்ணெய் பிரிந்து வந்ததும் கிளறி ஆற வைத்து, ஜாடியில் போட்டு வைக்கவும்.

உப்பு நார்த்தங்காய்

தேவையானவை: நார்த்தங்காய் துண்டுகள் - 4 கப், மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாய் அகன்ற ஒரு பாத்திரத்தில் கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் போட்டு, நன்றாகக் கலந்து, 3 நாட்கள் ஊற விடவும். நாலாம் நாள் காயை மட்டும் எடுத்து வெயிலில் காய விடவும். மாலை ஜாடியில் உள்ள தண்ணீரில் போடவும். இது போல ஒரு வாரம் செய்து, எடுத்து ஜாடியில் வைத்துக் கொள்ளவும்.
நார்த்தங்காயை சுருள் சுருளாக நறுக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்தும் செய்யலாம.
நன்றி :pettagum.blogspot

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX