ப்ராக்கோலி சப்பாத்தி
சப்பாத்தியில் நிறைய வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ப்ராக்கோலி
சப்பாத்தி. இந்த சப்பாத்தி உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஏனெனில்
ப்ராக்கோலியில் நிறைய சத்துக்களானது அடங்கியுள்ளது. எனவே இந்த ப்ராக்கோலியை
உணவில் அதிகம் சேர்த்தால், பல நோய்களில் இருந்து தப்பிக்க முடியும்.
அதிலும் ப்ராக்கோலியை சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை சப்பாத்தியாக செய்து
சாப்பிடலாம்.
இது ஒரு சிறந்த காலை உணவும் கூட. சரி, அந்த ப்ராக்கோலி சப்பாத்தியின் செய்முறையைப் பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 3 கப்
உப்பு - தேவையான அளவு
வெதுவெதுப்பான நீர் - 1 கப்
உள்ளே வைப்பதற்கு...
ப்ராக்கோலி - 1 (துருவியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து,
சப்பாத்தி மாவு பதத்திற்கு மென்மையாக பிசைந்து, சிறிது நேரம் ஊற வைத்துக்
கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, துருவிய
ப்ராக்கோலியை சேர்த்து, 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.
பின்பு
சீரகப் பொடி, மல்லி தூள், மாங்காய் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி,
5-6 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்கி, குளிர வைக்க வேண்டும்.
அடுத்து கோதுமை மாவை சிறு உருண்டைகளாக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அவற்றில் ஒன்றை எடுத்து, சிறு சப்பாத்தியாக தேய்த்து, அதன் நடுவே
ப்ராக்கோலி கலவையை வைத்து, நான்கு புறமும் மூடி, மீண்டும் சப்பாத்தியாக
தேய்க்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் செய்ய வேண்டும்.
இறுதியில் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல்லானது காய்ந்ததும் எண்ணெய்
தடவி, தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை ஒவ்வொன்றாக போட்டு, முன்னும்
பின்னும் எண்ணெய் ஊற்றி, வேக வைத்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான ப்ராக்கோலி சப்பாத்தி ரெடி!!! இதனை சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
Post a Comment