கல்யாணத்துக்கு ஜோடிப் பொருத்தம் அமைவது போல, சாப்பாட்டுக்கு 'சைட் டிஷ் பொருத்தம்’
அமைவதும் ரொம்பவே அவசியம். காலையில் எழுந்த உடனேயே, 'இன்னிக்கு என்ன சைட்
டிஷ் பண்றது’ என்று கவலையோடு யோசிக்க ஆரம்பிப்பவர்கள் ஏராளம். இந்த
விஷயத்தில் உங்களுக்கு உதவ... சமையல் கலை நிபுணர் உஷாதேவி, தனது சமையல்
ஞானத்தை தீவிரமாக பயன்படுத்தி, அலசி ஆராய்ந்து '30 வகை சைட் டிஷ்’
ரெசிபிகளை இங்கு வாரி வழங்கியிருக்கிறார்.
''சாதம், இட்லி, தோசை, இடியாப்பம், சப்பாத்தி, நாண்
என்று எல்லாவற்றுடனும் சாப்பிடுவதற்கு விதம்விதமான சைட் டிஷ்களை
கொடுத்திருக்கிறேன். இவற்றை செய்து பரிமாறினால், இந்தக் கோடையிலும் நீங்கள்
பாராட்டு மழையில் நனையலாம்'' என உற்சாகம் பூரிக்க சொல்கிறார் உஷாதேவி.
காரைக்குடி பேபிகார்ன் ஃப்ரை
தேவையானவை: பேபிகார்ன் - கால் கிலோ,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், மிளகுத்தூள் - தேவைக்கேற்ப, இஞ்சி -
பூண்டு விழுது - 2 டீஸ்பூன், கடலை மாவு, அரிசி மாவு - தலா ஒரு
டீஸ்பூன், பெரிய வெங்காயம், பெரிய தக்காளி - தலா ஒன்று, பச்சை மிளகாய் -
2, மிளகாய்த்தூள், கரம்மசலாத்தூள் - தேவைக்கேற்ப, தனியாத்தூள் - ஒன்றரை
டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், செட்டிநாடு
பவுடர் (டிபர்ட்மென்ட் கடைகள் கிடைக்கும்) - 2 டீஸ்பூன், கறிவேப்பிலை,
கொத்த மல்லி - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான
அளவு,
செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர்
ஊற்றி கொதிக்க வைத்து, கழுவிய பேபிகார்னை போட்டு 2 நிமிடம் வரை வைத்து பின்
தண்ணீரை வடிகட்டி எடுத்து கார்னை நீளவாக்கில் 'கட்’ செய்யவும். ஒரு
தட்டில் குறிப்பிட்ட அளவு மிளகாய்த்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள்,
எலுமிச்சைச் சாறு, உப்பு, மஞ்சள்தூள், இஞ்சி - பூண்டு விழுது சிறிதளவு
சேர்த்து, இதில் நறுக்கிய பேபி கார்னை சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்துப்
பிசிறிக் கொள்ளவும். பேபி கார்னை வறுப்பதற்கு முன் கடலை மாவும், அரிசி
மாவும் தூவி பிசிறி, நன்கு காய்ந்து கொண் டிருக்கும் எண்ணெயில் போட்டு
பொன்னிறமாக பொரித் தெடுத்து தனியே வைக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு
சேர்த்து பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு நன்கு
வதக்கவும். பிறகு இதில் மீதம் இருக்கும் இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து
பச்சை வாசனை போகும் வரை வதக்கி... மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள்,
செட்டிநாடு பவுடர், நறுக்கிய தக்காளி, உப்பு சேர்த்து மிதமான தீயில்
வதக்கி, பின் கொஞ்சம் தண்ணீர் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு இதனுடன் வறுத்த கார்னை சேர்த்து சிறிது நேரம் வதக்கி... இறக்கும்போது
கொத்தமல்லி, வறுத்த கறிவேப்பிலை சேர்த்து இறக்கி பரிமாறவும்.
இது சப்பாத்தி, சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ்.
கோவைக்காய் வறுவல்
தேவையானவை: கோவைக்காய் - கால் கிலோ
(நீளவாக்கில் நறுக்கவும்), மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் -
தேவைக்கேற்ப, சீரகக்தூள், தனியாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயை நீளவாக்கில்
நறுக்கி... மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், தனியாத்தூள், உப்பு,
கறி வேப்பிலை சேர்த்துப் பிசிறி 5 நிமிடம் வைக்கவும். அடி கனமான கடாயை
அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசிறி வைத்த கோவைக்காயை
போட்டு சில நிமிடங்கள் அதிக தீயில் வைத்து மூடிவிடவும். பிறகு, தீயை மிதமான
சூட்டில் வைத்து நன்கு வதக்கி, வெந்தவுடன் இறக்கவும்.
இதை தயிர்சாதம், சாம்பார்சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட... சுவை சூப்பராக இருக்கும்.
வெஜ் குருமா
தேவையானவை: கேரட் - 2,
உருளைக்கிழங்கு, நூக்கல் - தலா ஒன்று, பீன்ஸ் - 10 பச்சைப் பட்டாணி -
கால் கிலோ, பெரிய வெங்காயம் - 2, தக்காளி - ஒன்று, பச்சை மிளகாய் -
தேவைக்கேற்ப, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பூண்டு - 5 பல், ஏலக்காய் - 3,
பட்டை, பிரிஞ்சி இலை - தலா ஒன்று, லவங்கம் - 5, தேங்காய் - அரை மூடி,
முந்திரி - 10, தனியா - ஒரு டேபிள்ஸ்பூன், கசகசா, பொட்டுக்கடலை - தலா 2
டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: கேரட், உருளைக்கிழங்கு,
நூக்கல், பீன்ஸ் ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை
நீளவாக்கில் நறுக்கவும். பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு மூன்றையும் சேர்த்து
அரைக்கவும். ஏலக்காய், பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் ஆகியவற்றை லேசாக
வறுத்துப் பொடி செய்யவும். தேங்காயுடன் முந்திரி, தனியா, கசகசா,
பொட்டுக்கடலை சேர்த்து நைஸாக அரைக்கவும்.
குக்கரில் எண்ணெய் ஊற்றி, அடுப்பில் வைத்து,
காய்ந்ததும் சோம்பு சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து
நன்கு வதக்கவும். வெங்காயம் பொன்னிறம் ஆகும் சமயம் பச்சை மிளகாய் - இஞ்சி -
பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும்வரை சிறு தீயில் வதக்கவும்.
அதனுடன் நறுக்கிய தக்காளி, கறிவேப்பிலை, பொடி செய்த மசாலா, உப்பு சேர்த்து
சிறிது நேரம் வதக்கவும். பிறகு நறுக்கிய காய்கறி, பச்சைப் பட்டாணி சேர்த்து
மறுபடியும் வதக்கவும். இப்போது அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா,
மஞ்சள்தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து
கொதிக்கவிடவும் (உப்பு போதவில்லை என்றால் சிறிது போட்டுக் கொள்ளவும்). கொதி
வந்தவுடன் குக்கரை மூடி வேக வைக்கவும். வெந்ததும் திறந்து நறுக்கிய
கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இட்லி, சப்பாத்தி, புரோட்டாவுக்கு சைட் டிஷ் ஆகவும், சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் சிறந்தது இந்த குருமா.
பீட்ரூட் பொரியல்
தேவையானவை: பெரிய சைஸ் பீட்ரூட்,
பெரிய வெங்காயம் - தலா ஒன்று, பச்சை மிளகாய் - 2 சர்க்கரை - 2 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட், பெரிய வெங்காயம்,
பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். பீட்ரூட், பச்சை மிளகாயுடன் உப்பு
சேர்த்து குக்கரில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக்
கொள்ளவும். பிறகு, கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு சேர்த்து,
வெடித்ததும் உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், நறுக்கிய
வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் வேக வைத்த
பீட்ரூட் கலவையை சேர்த்து, தண்ணீர் வற்றியதும் சர்க்கரை சேர்த்து
வதக்கவும். பிறகு, சிறிதளவு தண்ணீர் விட்டு, மறுபடியும் கெட்டியாகும் வரை
வதக்கி இறக்கவும்.
இந்தப் பொரியல்... சாதம், வெரைட்டி ரைஸ் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ்.
வாழைக்காய் சிப்ஸ்
தேவையானவை: வாழைக்காய் - 2 (தோல் சீவி
வைக்கவும்), மஞ்சள்தூள் - சிறிதளவு, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அடுப்பில் கடாயை வைத்து,
எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் தோல் சீவிய வாழைக்காயை நேரடியாக கடாயில்
சிப்ஸ்களாக சீவவும். இவ்வாறு செய்வதால் சிப்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல்
வெள்ளையாக... அதே சமயம், மொறுமொறுப்பாகவும் இருக்கும். வாழைக்காயை
சீவும்போது அடுப்பை சிறு தீயிலும், பின்பு அதிகமாவும் வைத்து வறுத்தெடுக்க
வேண்டும். ஒரு கப்பில் மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள்
ஆகியவற்றை சேர்த்துக் கலக்கி வைக்கவும் (விருப்பப்பட்டால் சிறிதளவு கறுப்பு
உப்பு, சாட் மசாலாவை சேர்க்கலாம்). ஒவ்வொரு முறை சிப்ஸ்
வறுத்தெடுக்கும்போதும் இந்தப் பொடியை தூவவும். கடைசியாக கறிவேப்பிலை
வறுத்துப் போட்டு பரிமாறவும்.
இது வெரைட்டி ரைஸ்களுக்கு தொட்டுக்கொள்ள சிறந்தது.
குடமிளகாய் சட்னி
தேவையானவை: குடமிளகாய் பெரியது -
ஒன்று, சின்ன வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - 10 (அல்லது
தேவைக்கேற்ப), தக்காளி சிறியது - ஒன்று, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், புளி
- எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு
- தாளிக்க தேவையான அளவு, நல்லெண்ணெய் - ஒரு சிறிய குழிக்கரண்டி, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: குடமிளகாயை சதுரமாக
வெட்டிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக
நறுக்கவும். புளியை கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். அடுப்பில் அடி கனமான
கடாயை வைத்து நல்லெண்ªணய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு சேர்த்து, வெடித்ததும்
உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை போட்டு, அதன்பின்
வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதில் குடமிளகாய், நறுக்கிய
பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி
சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கி, பின்னர் புளிக்
கரைசலை சேர்த்து... எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு வதக்கி இறக்கவும்.
இதை உப்புமா, பொங்கல், தயிர் சாதம், வெறும் சாதத்துடன் சாப்பிடலாம்.
முட்டைகோஸ் சட்னி
தேவையானவை: முட்டைகோஸ் - கால் கிலோ,
காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - சிறிய நெல்லிக்காய்
அளவு அல்லது தக்காளி - 3, சின்ன வெங்காயம் - 10, உளுத்தம்பருப்பு - - 2
டீஸ்பூன், கடுகு - அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்த மல்லி - சிறிதளவு,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சின்ன வெங்காயத்தை
நறுக்கிக் கொள்ளவும். கடாயில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி
உளுத்தம்பருப்பை சேர்க்கவும். அது பொன்னிறம் ஆகும் சமயம் நறுக்கிய
வெங்காயம், முட்டைகோஸ், காய்ந்த மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.
முட்டைகோஸ் பச்சை வாசனை போனதும்... புளி,உப்பு, கொத்தமல்லி சேர்த்து
வதக்கவும் (புளிக்கு பதில் தக்காளி விரும்புபவர்கள் இச்சமயத் தில் நறுக்கிய
தக்காளி சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்). பிறகு அடுப்பிலிருந்து இறக்கி,
ஆற விட்டு, மிக்ஸியில் அரைக்கவும். கடுகு, கறிவேப்பிலை தாளித்து, இதனு டன்
சேர்த்துக் கலக்கவும்.
இந்த சட்னியை சப்பாத்தி, இட்லியுடன் பரிமாறலாம்.
வடைகறி
தேவையானவை: கடலைப்பருப்பு - 150
கிராம், பெரிய வெங்காயம் - 2 , பெரிய தக்காளி - ஒன்று, கரம் மசாலாத்தூள் -
ஒரு டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5,
லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, பிரிஞ்சி இலை - ஒன்று, சோம்பு - ஒரு
டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால்
டீஸ்பூன், மிளகாய்த்தூள் - விருப்பத்திற்கேற்ப, பொட்டுக்கடலை மாவு - 3
டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தக்காளியை நறுக்கி
மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக் கொள்ளவும். கடலைப்பருப்பை 2 மணி நேரம் ஊற
வைத்து, தண்ணீரை வடிகட்டி உப்பு சேர்த்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து
எடுக்கவும். இட்லித் தட்டில் எண்ணெய் தடவி இந்தக் கலவையை வைத்து இட்லி போல்
வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, ஏலக்காய்,
லவங்கம், பட்டை, பிரிஞ்சி இலை சேர்த்து வதக்கி, நீளவாக்கில் நறுக்கிய
வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். அதில் இஞ்சி -
பூண்டு விழுது சேர்த்து, சிறிது நேரம் வதக்கியவுடன், மஞ்சள்தூள்,
மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது நேரம் கிளறவும். பிறகு
அரைத்த தக்காளி விழுது, உப்பு சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை
வதக்கி, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதி வந்தவுடன், வேக வைத்த
கடலைப்பருப்பை ஒன்றிரண்டாக உதிர்த்து, கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி சிறிது
நேரம் கொதிக்கவிடவும். கடைசியில் பொட்டுக்கடலை மாவை சேர்த்து ஒரு கொதி
வந்தவுடன் இறக்கவும்.
இதை இட்லி, தோசை, ஆப்பத்துடன் பரிமாறலாம்.
வாழைப்பூ கோலா உருண்டை
தேவையானவை: வாழைப்பூ - ஒன்று, சின்ன
வெங்காயம் - 100 கிராம், பச்சை மிளகாய் - தேவைக்கேற்ப, இஞ்சி - பூண்டு
விழுது - 2 டீஸ்பூன், பொட்டுகடலை மாவு - 250 கிராம், கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிதளவு, வெள்ளை எள் அல்லது கசகசா - 100 கிராம், முந்திரி -
10, புளித்த மோர் - ஒரு கப், எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு -
தேவையான அளவு.
செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து,
நடுவில் உள்ள நரம்பு நீக்கவும். கொஞ்சம் தண்ணீரில் புளித்த மோரை ஊற்றி
கலக்கி அதில் ஆய்ந்த எல்லா வாழைப்பூவையும் போடவும். பிறகு வடிகட்டி உப்பு
சேர்த்து குக்கரில் போட்டு வேக வைத்து, நீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக்
கொள்ளவும். பிறகு இதை மிக்ஸியில் ஒன்றிண்டாக அரைத்துக் கொள்ளவும். ஒரு
பாத்திரத்தில் மிகவும் பொடி யாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி -
பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு, நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி,
பொடியாக நறுக்கிய முந்திரிப் பருப்பு, ஒன்றிரண்டாக அரைத்த வாழைப்பூ
சேர்த்துப் பிசையவும். இதில் பொட்டுக்கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக
சேர்க்கவும். உருட்டும் பதத்தில் வந்ததும் பொட்டுக் கடலை மாவு சேர்ப்பதை
நிறுத்திவிட வேண்டும். பின்னர் இதனை எள்ளிலோ அல்லது கசகசாவிலோ உருட்டி
சிறிது நேரம் ஃப்ரிட்ஜில் வைக்கவும். தேவைபடும்போது எண்ணெயை நன்கு
காயவைத்து அதில் இந்த உருண்டைகளை போட்டு சிறிது நேரம் கிளறாமல் விட்டு,
நன்கு வெந்தவுடன் இறக்கவும்.
இது, காய்கறி பிரியாணி மற்றும் சாம்பார் சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
ஆலு புக்காரா
தேவையானவை: பேபி உருளைக்கிழங்கு - ஒரு
பாக்கெட், இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, பெரிய
வெங்காயம் - 150 கிராம், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் - தலா ஒரு டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு விழுது - 3 டேபிள்ஸ்பூன், வெண்ணெய், கிரீம்
(விருப்பப்பட்டால்) - தலா 2 டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய்,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பேபி உருளைக்கிழங்கை வேக
வைத்து தோலுரித்து எண்ணெயில் பொரித்தெடுத்து தனியே வைக்கவும். வெங்காயத்தை
நீளவாக்கில் நறுக்கி எண்ணெயில் பொரித்தெடுத்து ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக
அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் இஞ்சி - பூண்டு
விழுது, கீறிய பச்சை மிளகாயை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
பிறகு அதில் அரைத்த வெங்காய விழுது, முந்திரி விழுதை சேர்த்து வதக்கவும்.
பின்னர் சிறிதளவு தண்ணீர் சேர்த்து... அதனுடன் சீரகத்தூள், கரம்
மசாலாத்தூள், வறுத்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்க்கவும். குழம்பு பதம்
வந்தவுடன், விருப்பப்பட்டால் வெண்ணெயும், கிரீமும் சேர்த்து, சிறிது நேரம்
கொதிக்க வைத்து, கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.
சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு இது சூப்பர் சைட் டிஷ்.
மூலிகை சட்னி
தேவையானவை: வல்லாரைக் கீரை -
(ஆய்ந்தது), புதினா இலை - தலா ஒரு கப், கொத்தமல்லி இலை - அரை கப்,
கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பச்சை மிளகாய் -
தேவைக்கேற்ப, சின்ன வெங்காயம் - 10, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு
டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - 3 டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். பின்னர் நறுக்கிய
வெங்காயம், பச்சை மிளகாய், தோல் சீவிய இஞ்சி, கொத்தமல்லி, புதினா, கறிவேப்
பிலை, வல்லாரைக் கீரை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, ஆறிய வுடன் உப்பு
சேர்த்து அரைத்து எடுத்து, எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக் கவும்.
சப்பாத்தி, சமோசாவுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் இந்த சட்னி.
பகரா பேங்கன்
தேவையானவை: கத்திரிக்காய் - கால்
கிலோ, தேங்காய் துருவல் - 3 டீஸ்பூன், புளி - எலுமிச்சை அளவு, வெங்காயம் -
100 கிராம், தனியா - 3 டீஸ்பூன், எள், சீரகம் - தலா 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் ஸ்பூன், மிளகாய்த்தூள் - தேவைக்கேற்ப, வேர்க்கடலை - 3
டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 5 பல்,
எண்ணெய், சீரகம் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தனியா, எள்,
வேர்க்கடலை, சீரகம், மிளகு, முந்திரியை தனித்தனியாக வறுத்து மிக்ஸியில்
சேர்த்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்
நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும். இதில் நறுக்கிய இஞ்சி,
பூண்டு, நறுக்கிய தக்காளி போட்டு வதக்கி... தேங்காய் துருவல் சேர்த்து
மேலும் வதக்கவும். ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்து எடுத்துக்
கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய
கத்திரிக்காயை சேர்த்து வதக்கி... உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள்
போட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து மேலும் வதக்கவும். பிறகு புளிக்கரைசல்,
அரைத்த மசாலா பொடி, மசாலா விழுது சேர்த்து வதக்கவும். மற்றொரு கடாயில்
எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து, கத்திரிக்
காயுடன் சேர்த்து, எண்ணெய் தெளிந்தவுடன் இறக்கவும்.
இது... சப்பாத்தி, இட்லியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்.
ஸ்வீட் கார்ன் பனீர் கோஃப்தா
தேவையானவை: ஸ்வீட் கார்ன் - 100
கிராம், பனீர் - 50 கிராம், உருளைக்கிழங்கு - 2, முந்திரிப் பருப்பு - 10,
முந்திரி விழுது - சிறிதளவு, தக்காளி விழுது - 100 கிராம், மிளகாய்த்தூள் -
தேவைக்கேற்ப, வெங்காயம் - 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3,
கரம் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மைதா - 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் -
கால் டீஸ்பூன், கொத்தமல்லி இலை - சிறிதளவு, இஞ்சி - பூண்டு விழுது - 2
டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பாத்திரத்தில் தண்ணீர்
ஊற்றி, கொதித்ததும் ஸ்வீட் கார்னை போட்டு ஐந்து நிமிடத்துக்குப் பிறகு
எடுத்து, தண்ணீரை வடிகட்டி மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து
வைக்கவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து,
தோலுரித்து மசித்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மூன்றையும் ஒன்றாக
சேர்த்து... அதனுடன் உப்பு, சோம்பு, நறுக்கிய பச்சை மிளகாய் சிறிதளவு,
உடைத்த முந்திரி, கொத்தமல்லி இலை, மைதா, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு
பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, காயும் எண்ணெயில் போட்டு
பொரித்தெடுத்து தனியே வைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய
வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக ஆகும் வரை வதக்கி... இஞ்சி - பூண்டு
விழுது, மீதமுள்ள பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தக்காளி
விழுது, உப்பு சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும். பிறகு,
முந்திரி விழுதையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு
கொதித்ததும் பொரித்து வைத்திருக்கும் உருண்டைகளை சேர்க்கவும். கொத்தமல்லி
இலை தூவி இறக்கவும்.
இதை புலாவ், சாதம், சப்பாத்தி, நாண் ஆகியவற்றுக்கு சைட் டிஷ்ஷாக பரிமாறலாம்.
வாழைக்காய் சட்னி
தேவையானவை: வாழைக்காய் - ஒன்று,
காய்ந்த மிளகாய் - 8, பெரிய வெங்காயம் - ஒன்று, சின்ன வெங்காயம் - 10,
பூண்டு - ஒரு பல், தக்காளி - 2, புளி - சிறிதளவு, சோம்பு - ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு, எண்ணெய் -
தலா ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வாழைக்காயை வேக வைத்து,
தோலுரித்து, கட்டியில்லாமல் பிசைந்து வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய்,
பூண்டு, புளி, சோம்பு ஆகியவற்றை ஒன்றுசேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்
கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து, எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடுகு,
உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து... நறுக்கிய பெரிய வெங்காயம், சின்ன
வெங்காயத்தைப் போட்டு நன்கு வதக்கவும். பின்னர் இதில் நறுக்கிய தக்காளி,
உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அரைத்த மசாலா விழுது, மசித்த
வாழைக்காய் போட்டு வதக்கவும். பிறகு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு
வதக்கி, எண்ணெய் தெளிந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
இதை... இட்லி, தோசையுடன் பரிமாறலாம்.
உருளைக்கிழங்கு மசாலா
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால்
கிலோ, தேங்காய் துருவல் - ஒரு கப் (பால் எடுக்கவும்), காய்ந்த மிளகாய் -
5, தனியா - 2 டீஸ்பூன், முந்திரி - 10, வெங்காயம் - ஒன்று, கறிவேப்பிலை,
கொத்தமல்லி - சிறிதளவு, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி,
குக்கரில் வேக வைத்து, தோலுரித்து நறுக்கி கொள்ளவும். காய்ந்த மிளகாய்,
தனியா, முந்திரியுடன் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில்
எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு போட்டு, வெடித்ததும் உளுத்தம்பருப்பு,
இஞ்சி - பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கி, நறுக்கிய வெங்காயத்தை
சேர்த்து, வதங்கியவுடன் அரைத்த மசாலாவை சேர்த்து வதக்கவும். பிறகு
தேங்காய்ப் பால், வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து... கறிவேப்பிலை,
கொத்தமல்லி, உப்பு போட்டு எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
கடாய் பனீர்
தேவையானவை: பனீர் - கால் கிலோ,
குடமிளகாய், வெங்காயம், தக்காளி - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன், இஞ்சி -
பூண்டு விழுது - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், தனியாத்தூள் -
ஒரு டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான
அளவு.
மசாலா பொடி தயாரிக்க: காய்ந்த மிளகாய் - 5, தனியா - 2
டீஸ்பூன், லவங்கம், பட்டை, ஏலக்காய் - தலா 2, சோம்பு - ஒரு டீஸ்பூன்,
வெந்தயம் - அரை டீஸ்பூன், மிளகு - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: மசாலா பொடி
தயாரிக்க கொடுத்துள்ளவற்றை வறுத்து ஒன்றிரண்டாக பொடி செய்து கொள்ளவும்.
கடாயில் நெய் ஊற்றி, காய்ந்ததும் நறுக்கிய ஒரு வெங்காயம், நறுக்கிய 2
குடமிளகாய், பனீரை தனித்தனியே வதக்கி எடுத்து கொள்ளவும். பிறகு கடாயில்
சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்து... பொடியாக
நறுக்கிய மற்றொரு வெங்காயத்தை நன்கு வதக்கி, இஞ்சி - பூண்டு விழுதை
சேர்த்து வதக்கவும். பிறகு, மிளகாய்த்தூள், தனியாத்தூள், உப்பு, நறுக்கிய
தக்காளி, மசாலா பொடியை போட்டு வதக்கி, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர்
சேர்த்து, அதனுடன் வதக்கி வைத்திருக்கும் பனீர், வெங்காயம், குடமிளகாய்
சேர்த்து மேலும் வதக்கி... எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கவும்.
இது... சப்பாத்தி, நாண் ஆகியவற்றுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
பப்பாளி சாலட்
தேவையானவை: பப்பாளி - ஒன்று (செங்காய்
பதத்தில் தேர்வு செய்யவும்), முளைகட்டிய பச்சைப் பயறு - 50 கிராம்,
எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - சிறிய
துண்டு, கொத்தமல்லி - சிறிதளவு, தேன் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பப்பாளியை 'கட்’ செய்து
இட்லி குக்கரில் வேக வைத்து எடுக்கவும். பின்னர் முளைகட் டிய பச்சைப்
பயறையும் வேக வைக்கவும். ஒரு பாத்திரத்தில் தேன், பொடியாக நறுக்கிய பச்சை
மிளகாய், உப்பு, சுத்தம் செய்து நீளமாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக் கிய
கொத்தமல்லி, எலுமிச்சை சாறு சேர்த்துக் கலக்கவும். இதனுடன் வேக வைத்த
பப்பாளி மற்றும் பச்சைப் பயறு சேர்த்துக் கிளறி, அப்படியே பரிமாறவும்.
சேப்பங்கிழங்கு சாப்ஸ்
தேவையானவை: சேப்பங்கிழங்கு - அரை
கிலோ, வெங்காயம், பச்சை மிளகாய் - தலா 2, கொத்தமல்லி இலை - ஒரு கைப்பிடி
அளவு, கசகசா - 3 டீஸ்பூன், சோம்பு - ஒரு டீஸ்பூன், முந்திரி - 10,
மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் - ஒரு
டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: சேப்பங்கிழங்கை கழுவி
குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி வேக வைத்து, தோலுரித்து நீளமாக நறுக்கி
கொள்ளவும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து நறுக்கிய கிழங்கை கொஞ்சம்
கொஞ்சமாக போட்டு சிவக்க வறுத்து எடுத்து, அதில் உப்பு, மிளகாய்த்தூள்
சேர்க்கவும். கடாயில் கசகசா, சோம்பு, முந்திரி போட்டு வறுத்து, மிக்ஸியில்
பொடியாக்கிக் கொள்ளவும். பின்னர் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி
மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.
கடாயில் கொஞ்சம் அதிகமாக எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும்
வெங்காய விழுதைப் போட்டு நன்கு வதக்கி, அதனுடன் ஒன்றன் பின் ஒன்றாக இஞ்சி -
பூண்டு விழுது, கசகசா பொடி, கரம் மசாலாத்தூள் அல்லது கறி பவுடர் சேர்த்து
நன்கு வதக்கி (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்துக் கொள்ளவும்), வறுத்த
சேப்பங்கிழங்கை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
இதனை புலாவ், சாம்பார் சாதத்துடன் சாப்பிட... சுவை அசத்தலோ அசத்தல்!
தயிர் வெண்டைக்காய்
தேவையானவை: வெண்டைக்காய் - கால் கிலோ,
தக்காளி - ஒன்று, மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை
டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, வெங்காயம் - 2, சீரகம் - ஒரு டீஸ்பூன், கரம்
மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் -
கால் டீஸ்பூன், இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி - சிறிதளவு, எண்ணெய், நெய் - தலா
ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு,
செய்முறை: வெண்டைக்காயை கழுவி துடைக்
கவும். பின்னர் நடுவில் கீறி விதையை எடுத்து விடவும். தட்டில் சிறிதளவு
மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள்,
உப்பு சேர்த்துக் கலந்து வைக்கவும். இந்த கலவையை கீறிய வெண்டைக் காயில்
தடவவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மசாலா தடவிய வெண்டைக்காயை
போட்டு, சிறு தீயில் வதக்கி, வெந்தவுடன் எடுத்து தனியே வைக்கவும். கடாயில்
நெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், இஞ்சி - பூண்டு விழுதை சேர்த்து
வதக்கவும். பின் அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை
மிளகாயை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மீதமுள்ள கரம்மசாலா,
மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகாய்த் தூள், மிளகுத்தூள், ஏலக்காய்த்தூள்
சேர்க்கவும். பிறகு, வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காய் சேர்த்து...
தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்து, நன்கு கிளறி, தீயை அணைத்து, தயிரை
நன்கு அடித்து இதில் சேர்த்து கலந்து, மறுபடியும் அடுப்பில் வைத்து
சிறுதீயில் கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் இறக்கி, கொத்தமல்லி
தூவவும்.
இதை சப்பாத்தியுடன் பரிமாறலாம்.
பீர்க்கங்காய் கொத்சு
தேவையானவை: பீர்க்கங்காய் - அரை கிலோ,
புளி - நெல்லிக்காய் அளவு, பச்சை மிளகாய் - 3, சின்ன வெங்காயம் - 10,
கடுகு - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - அரை
டீஸ்பூன், மஞ்சள்தூள், மிளகுத்தூள், சீரகத்தூள் - தலா கால் டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பீர்க்கங்காயை தோல் சீவி
நறுக்கி உப்பு, மஞ்சள்தூள், பச்சை மிளகாய் சேர்த்து, ஒரு பாத்திரத்தில் வேக
வைத்து, மசித்துக் கொள்ளவும். பிறகு கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும்
கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் போட்டு தாளித்து, புளிக்கரைசலை
சேர்க்கவும். அதில் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மிளகுதூள், சீரகத்தூள்
சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி.... சாதத்துடன் பரிமாறவும்.
உருளைக்கிழங்கு ஸ்டூ
தேவையானவை: உருளைக்கிழங்கு - கால்
கிலோ, பச்சை மிளகாய் - 3, தேங்காய் - அரை மூடி, இஞ்சி - சிறிதளவு,
மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை கழுவி, தோல்
சீவி நறுக்கவும். தேங்காயை துருவி கொஞ்ச மாக தண்ணீர் விட்டு மிக்ஸியில்
அரைத்து பால் எடுத்து தனியே வைக்கவும். மறுபடியும் சிறிது தண்ணீர் சேர்த்து
அரைத்தால் இரண்டாவது பால் கிடைக் கும். இந்த தேங்காய்ப் பாலை ஒரு
பாத்திரத்தில் ஊற்றி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, பொடியாக நறுக்கிய
இஞ்சி போட்டு வேக வைக்கவும். வெந்த உருளைக்கிழங்கை மசித்து... கீறிய பச்சை
மிளகாய், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்கவிடவும். இறக்கு வதற்கு முன் முதல்
தேங்காய்ப் பாலை ஊற்றி, கொதி வரும் போது இறக்கிவிடவும்.
இதனை இட்லி, இடியாப்பத்துடன் சாப்பிடலாம்.
மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - அரை கிலோ,
பச்சை மிளகாய் - 6 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்), வெங்காயம் - ஒன்று,
மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, சர்க்கரை - 50
கிராம், கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க
தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில் எண்ணெய் ஊற்றி,
காய்ந்ததும் கடுகு போட்டு வெடித்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து,
சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து
நன்கு வதக்கவும். அதில் நறுக்கிய மாங்காய், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து
சிறிது நேரம் வதக்கி, பின்னர் தண்ணீர் சேர்த்து மூடி 2 விசில் வரும் வரை
வேக வைக்கவும். ஆறியவுடன் மசித்து, சர்க்கரை சேர்த்து கொதிக்கவிடவும்.
கெட்டியானதும் இறக்கி பரிமாறவும்.
பூண்டு சட்னி
தேவையானவை: பூண்டுப் பல் - ஒரு கப்,
காய்ந்த மிளகாய் - தேவைக்கேற்ப, புளி - எலுமிச்சை அளவு, கடுகு - ஒரு
டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு,
எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் கொஞ்சம் எண்ணெயை
விட்டு, காய்ந்ததும் பூண்டு சேர்த்து வதக்கி, அதனுடன் புளி, காய்ந்த
மிளகாய், உப்பு சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்து, மிக்ஸியில் அரைத்து
எடுக்கவும். பின்னர் மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு,
கறிவேப்பிலையை தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியில் சேர்க்கவும்.
இதை இட்லி, தோசை, தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிடலாம்.
அவியல்
தேவையானவை: முருங்கைக்காய், கேரட்,
வாழைக்காய் - தலா ஒன்று, பீன்ஸ் - 5, சேனைக்கிழங்கு - 100 கிராம், பச்சை
மிளகாய் - 5, சீரகம் - இரண்டு டீஸ்பூன், தேங்காய் - அரை மூடி (துருவிக்
கொள்ளவும்), தயிர் - ஒரு கப், பூண்டு - 3 பல், கடுகு அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை - சிறிதளவு, தேங்காய் எண்ணெய் - ஒரு
டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: முதலில் காய்கறிகளைக்
கழுவி, ஒன்று போல் நறுக்கி, பாத்திரத்தில் போட்டு, அதனுடன் நறுக்கிய பச்சை
மிளகாய், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து
எடுக்கவும். தேங்காய் துருவலுடன், பூண்டு, பச்சை மிளகாய், சீரகம், சேர்த்து
மிக்ஸியில் ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு,
காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி தாளித்து, அரைத்த விழுதைப்
போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு வெந்த காய்கறிகளையும்
சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி, தயிர் சேர்த்துக் கிளறவும்.
இதனை ஆப்பம், தோசை, சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.
மஷ்ரூம் ரெட் கறி
தேவையானவை: மஷ்ரூம் - 100 கிராம்,
பேபிகார்ன் அல்லது பனீர் - 50 கிராம், காய்ந்த மிளகாய் - 10, வெங்காயம் -
2, இஞ்சி - சிறிய துண்டு, பூண்டு - 10 பல், தேங்காய்ப் பால் - 2 கப்,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் தண்ணீர் ஊற்றி,
நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு, ஒரு கொதி வந்தவுடன் வெங்காயத்தை எடுத்து,
இஞ்சி - பூண்டுடன் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது தண்ணீர் ஊற்றி அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து ஒரு கொதி
வந்ததும் இறக்கி மிளகாயை ஆற வைத்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பின்னர் அதனுடன் அரைத்த மிளகாயை சேர்த்து நன்கு வதக்கி, மஷ்ரூம் சேர்த்து
மேலும் வதக்கவும். பிறகு, தேங்காய்ப் பால், உப்பு சேர்த்துக்
கொதிக்கவிடவும். அதனுடன் நறுக்கிய பேபிகார்ன் அல்லது வறுத்த பனீரை சேர்த்து
எல்லாம் வெந்தவுடன் இறக்கவும்.
இதை... சாதம், புலாவ் ஆகியவற்றுடன் பரிமாறலாம்.
பருப்பு தண்ணி மசாலா
தேவையானவை: கடலைப்பருப்பு - 100
கிராம், வெங்காயம் - 2, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், தக்காளி,
பச்சை மிளகாய் - தலா 2, சோம்பு, சீரகம் - ஒரு டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு
- 3 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் - 2 டீஸ்பூன்,
கறி பவுடர் - 3 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் -
கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பை மஞ்சள்தூள்
சேர்த்து வேக வைத்து.... பருப்பு தண்ணீரை தனித்தனியாக எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், நீளமாக நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு
பொன்னிறமாக வதக்கி, மிக்ஸியில் போட்டு, தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துக்
கொள்ளவும். தக்காளியை நெருப்பில் சுட்டு தோலுரித்து அதையும் மிக்ஸியில்
அரைத்து எடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் சீரகம், சோம்பு,
கறிவேப்பிலை, இஞ்சி - பூண்டு விழுது, கீறிய பச்சை மிளகாய் சேர்த்து
வதக்கவும். அதில் மிளகாய்தூள், தனியாத்தூள், கறி பவுடர் சேர்த்து வதக்கி,
அரைத்த தக்காளி விழுதைப் போட்டு நன்கு எண்ணெய் தெளிய வதக்கவும். பிறகு
உப்பு சேர்த்து, பருப்பு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்கவிட்டு, வெந்த முழு
பருப்பு கொஞ்சம் சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி,
எலுமிச்சைச் சாறு பிழிந்து கிளறி இறக்கவும்.
இதை சப்பாத்தி, இட்லிக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
பட்டர்பீன்ஸ் பொரியல்
தேவையானவை: பட்டர் பீன்ஸ் - கால்
கிலோ, வெங்காயம் - ஒன்று, முந்திரி - 5, கசகசா, சோம்பு - தலா ஒரு டீஸ்பூன்,
பட்டை, லவங்கம் - தலா ஒன்று, தேங்காய் துருவல் - ஒரு
டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: பட்டர் பீன்ஸை கழுவி
குக்கரில் போட்டு, தேவையான தண்ணீர் ஊற்றி உப்பு, மஞ்சள்தூள் தூவி மூடி
இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். தேங்காய் துருவலுடன்
முந்திரி, கசகசா, சோம்பு, லவங்கம், பட்டை, தண்ணீர் சேர்த்து மையாக
அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம்,
கறிவேப்பிலை போட்டு வதக்கி, அரைத்த தேங்காய் மசாலா, மிளகாய்த்தூள் சேர்த்து
நன்கு வதக்கி, வேக வைத்த பட்டர் பீன்ஸை தண்ணீருடன் சேர்த்துக் கிளறி,
எண்ணெய் பிரிந்து வரும்போது இறக்கி, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
இது... சாதம், சப்பாத்திக்கு ஏற்ற சை டிஷ்.
கீரை கூட்டு
தேவையானவை: சிறுகீரை - ஒரு கட்டு,
தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், பச்சை
மிளகாய் - 2, வறுத்த பயத்தம்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன், கடுகு,
உளுத்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, மஞ்சள்தூள் -
அரை டீஸ்பூன், எண்ணெய் - தாளிக்க தேவையான அளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: குக்கரில்
பயத்தம்பருப்புடன் மஞ்சள்தூள், ஆய்ந்தெடுத்து கழுவிய கீரையை போட்டு, கீறிய
பச்சை மிளகாயையும் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும். தேங்காய்,
சீரகத்தை சேர்த்து அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு,
உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பின்னர் தேங்காய் - சீரக விழுது
சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வெந்த பருப்பு - கீரையை சேர்த்து, உப்பு
போட்டு, கெட்டியானதும் இறக்கவும்.
இது, சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
காளான் வதக்கல்
தேவையானவை: காளான் - ஒரு பாக்கெட்,
வெங்காயம் - ஒன்று, மிளகு - 2 டீஸ்பூன் (பொடித்துக்
கொள்ளவும்), மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கரம் மசலாத்தூள் - ஒரு டீஸ்பூன்,
பூண்டு - 2 பல், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி -
சிறிதளவு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான
அளவு.
செய்முறை: காளானை கழுவி நறுக்கி
அதனுடன் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், மிளகுத்தூள், கரம் மசாலாத்தூள்
சேர்த்து சிறிது நேரம் வைக்கவும். தேங்காயை கொரகொரப்பாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் தட்டிய பூண்டு போட்டு, பின்னர்
நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கி, கலந்து வைத்துள்ள காளானை சேர்த்து
நன்கு வதக்கவும். காளான் பாதி வெந்த வுடன் அரைத்த தேங்காயை சேர்த்து, உப்பு
போட்டு வதக்கவும். சுருள வதங்கியவுடன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி
இறக்கவும்.
இதை சாப்பாத்திக்கு தொட்டு சாப்பிடலாம்.
கொத்தமல்லி துவையல்
தேவையானவை: கொத்தமல்லி - ஒரு கட்டு,
காய்ந்த மிளகாய் - 10 (அல்லது தேவைக்கேற்ப), புளி - நெல்லிக்காய் அளவு,
கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - இரண்டு டீஸ்பூன், கறிவேப்பிலை -
சிறிதளவு, எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெயை காய
வைத்து, உளுத்தம்பருப்பு சேர்த்து வறுபட்டவுடன், காய்ந்த மிளகாய், புளி,
உப்பு, கழுவிய கொத்தமல்லி இலையை போட்டு வதக்கி, பிறகு மிக்ஸியில் அரைத்து
எடுக்கவும். மீதமுள்ள எண்ணெயை கடாயில் ஊற்றி, காய்ந்ததும் கடுகு போட்டு,
வெடித்ததும் கறிவேப்பிலை சேர்த்து, அரைத்து வைத்திருக்கும் விழுதைப் போட்டு
நன்கு சுருள வதக்கி இறக்கவும்.
இது... இட்லி, தயிர் சாதம், பிரியாணிக்கு ஏற்ற சைட் டிஷ்.
தொகுப்பு: பத்மினி, படங்கள்: எம்.உசேன்
ஃபுட் டெகரேஷன்: 'செஃப்’ ரஜினி
நன்றி - விகடன்
Post a Comment