குணுக்கு குழம்பு
தேவையானவை: பக்கோடா (அ) குணுக்கு - 10, புளி - நெல்லிக்காய் அளவு, குழம்பு பொடி - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கடுகு - தலா ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளிக்கவும். புளியை சிறிது தண்ணீரில் கரைத்து இதில் ஊற்றி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். புளி வாசனை போனதும் குழம்பு பொடி சேர்த்து, மேலும் கொதிக்க வைத்து, பக்கோடாவை (அ) குணுக்கு போட்டு நன்றாகக் கொதித்ததும் இறக்கி... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவவும்.
வடைகறி
தேவையானவை: வடை - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒன்றரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், சோம்பு - தலா அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து வதக்கி... இஞ்சி-பூண்டு விழுது, தக்காளி, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, கொதித்ததும் வடைகளைக் கிள்ளி போடவும். சிறிது நேரம் கொதிக்கவிட்டு... கொத்தமல்லி, கறிவேப்பிலை தூவி பரிமாறவும்.
பேல் பூரி
தேவையானவை: மிக்சர், அரிசிப்பொரி - தலா 100 கிராம், வெங்காயம், தக்காளி - தலா 1, ஸ்வீட் சட்னி (பேரீச்சம்பழம் வெல்லம் புளி மூன்றையும் சேர்த்து அரைத்த விழுது), கார சட்னி (கொத்தமல்லி புதினா பச்சை மிளகாய் உப்பு சேர்த்து அரைத்த விழுது), பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் ஒரு அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
கோஃப்தா கறி
தேவையானவை: சாதம் - ஒரு பெரிய பவுல், பூசணிக்காய் ஒரு கீற்று (அ) பெங்களூர் கத்திரிக்காய் - பாதி, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு, கோதுமை மாவு, மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
கிரேவிக்கு: வெங்காயம், தக்காளி - 2 (நறுக்கி அரைத்துக் கொள்ளவும்), கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், மிளகாய்த்தூள், இஞ்சி - பூண்டு விழுது - தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தலா கால் டீஸ்பூன்.
செய்முறை: காயைத் துருவிப் பிழிந்து, சாதத்துடன் சேர்க்கவும். இதில் கொத்தமல்லி, கோதுமை மாவு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கிரேவிக்கு கொடுத்துள்ளவற்றை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை இந்த கிரேவியில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
ஈஸி கொத்து பரோட்டா
தேவையானவை: பரோட்டா - 10, வெங்காயம் - 2, தக்காளி - 1, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தோசைக் கல்லில் எண்ணெய் உற்றி, காய்ந்ததும் வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும். உப்பு, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, நன்றாக வதக்கவும். இதில் பரோட்டாக்களை பிய்த்துப் போட்டு, தோசை கரண்டியால் கைகளால் கொத்தி கொத்தி எடுத்து, சூடாக பரிமாறவும்.
காராபூந்தி பச்சடி
தேவையானவை: காராபூந்தி - ஒரு கப், கெட்டி தயிர் - ஒன்றரை கப், கடுகு - கால் டீஸ்பூன், எண்ணெய் - கால் டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தயிருடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்து, தயிருடன் சேர்க்கவும். பரிமாறுவதற்கு முன் காராபூந்தி சேர்த்துப் பரிமாறவும்.
அப்பள சமோசா
தேவையானவை: அப்பளம் - 10, காய்கறி பொரியல் - 50 கிராம், எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: ஒரு அப்பளத்தை தண்ணீரில் நனைத்து உடனே எடுத்து பாதியாக கட் செய்து, ஒரு பாதியின் இரு முனைகளையும் நன்றாக கைகளால் அழுத்தி ஒட்டி கோன் வடிவத்தில் செய்யவும். இதில் காய்கறி பொரியலை வைத்து, ஓரங்களை அழுத்தி ஒட்டிவிடவும். இதேபோல் எல்லாவற்றையும் செய்து, காயும் எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
அப்பள பொடிமாஸ்
தேவையானவை: அப்பளம் - 10, இஞ்சித் துருவல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு பொரியல், நறுக்கிய கொத்தமல்லி, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி, அப்பளங்களை சிறு சிறு துண்டுகளாக போட்டு பொரித்து, தனியே வைக்கவும். எண்ணெயில் கடுகு, சீரகம் தாளித்து, இஞ்சித் துருவல், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, உருளைக்கிழங்கு பொரியலை சேர்த்துக் கிளறவும். பொரித்த அப்பளத்தை கைகளினால் நொறுக்கி சேர்த்துக் கலந்து இறக்கவும். எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
புலாவ் பக்கோடா
தேவையானவை: புலாவ் (அ) பிரியாணி - ஒரு பவுல், எள் - 3 டேபிள்ஸ்பூன், வறுத்த ரவை, சோள மாவு - தலா 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: புலாவ் (அ) பிரியாணியில் உள்ள கிராம்பு, பிரிஞ்சி இலைகளை எடுத்துவிட்டு, மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, கொதித்ததும் ரவையைப் போட்டு மிருதுவாகும்வரை கிளறவும். இதனுடன் அரைத்த புலாவ் கலவை, உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், எள், சோள மாவு ஆகியவற்றை சேர்த்துக் கலந்து, காயும் எண்ணெயில் பக்கோடாக்களாக பொரித்து எடுக்கவும்.
வெஜிடபிள் ரைஸ் சப்பாத்தி
தேவையானவை: காய்கறிகள் (சமையலுக்குப் பயன்படுத்தும்போது ஒன்றிரண்டாக எஞ்சுபவை) - 50 கிராம் (பொடியாக நறுக்கவும்), சாதம் - ஒரு பவுல், கோதுமை மாவு - 50 கிராம், கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்துடன் கோதுமை மாவு, கரம் மசாலாத்தூள், உப்பு, காய்கறியை சேர்த்து 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு கெட்டியாகப் பிசையவும். இதை தடிமனான சப்பாத்திகளாக இட்டு, காயும் தோசைக் கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.
சப்பாத்தி ஸ்வீட் ரோல்ஸ்
தேவையானவை: சப்பாத்தி - 10, தேங்காய் துருவல், சர்க்கரை - தலா 100 கிராம், நெய் - சிறிதளவு,
செய்முறை: தேங்காய் துருவலுடன் சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். ஒவ்வொரு சப்பாத்தியிலும் சிறிது நெய் தடவி, தேங்காய் கலவையை நடுவில் வைத்து, பாய் போல் சுருட்டி பரிமாறவும்.
விருப்பப்பட்டால் சிறிது டூட்டி ஃப்ரூட்டி சேர்த்துக் கொள்ளலாம்.
ரைஸ் வடகம்
தேவையானவை: வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கவும்), பச்சை மிளகாய் விழுது (அ) மிளகாய்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் (அ) ஓமம் - ஒரு டீஸ்பூன், சாதம், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து (மிக்ஸியிலும் அரைக்கலாம்) கொள்ளவும். வெயிலில் பிளாஸ்டிக் ஷீட் விரித்து, அரைத்த கலவையை சிறியதாக கிள்ளிப் போட்டு, நன்றாகக் காய வைத்து எடுக்கவும்.
தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ள லாம்.
ரைஸ் டோக்ளா
தேவையானவை: சாதம் - 2 டம்ளர், கோதுமை மாவு - கால் டம்ளர், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, சீரகம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: சாதத்துடன் கோதுமை மாவு, உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தண்ணீர் விடாமல் கெட்டியாகப் பிசையவும். இதை ஒரு தட்டில் சப்பாத்தி போல் பரத்தி, ஆவியில் வேக வைக்கவும். நன்றாக ஆறியதும் சிறு துண்டுகளாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, சீரகம் தாளித்து, துண்டுகளின் மேல் ஊற்றி... நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்க்கவும்.
மைசூர்பாகு அல்வா
தேவையானவை: மைசூர்பாகு துண்டுகள் - 10, பால் - 2 டம்ளர், வறுத்த முந்திரி - 2 டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்.
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். மைசூர்பாகை மிக்ஸியில் ஒரு சுற்றவும். கொதிக்கும் பாலில் பொடித்த மைசூர் பாகை சேர்த்து, சிறிது கெட்டி யானதும் முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்.
சூப் ரசம்
தேவையானவை: தக்காளி சூப் - 200 மி.லி, மிளகு - 2 டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 1, கடுகு, பெருங்காயத்தூள் - தலா கால் டீஸ்பூன், புளி - சிறிய உருண்டை, நெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மிக்ஸியில், கறிவேப்பிலை, கொத்தமல்லி, காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்துப் பொடித்து, புளியைக் கரைத்து ஊற்றி அரைக்கவும். இதனுடன் தக்காளி சூப், உப்பு சேர்த்துக் கலந்து, அடுப்பில் வைத்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும். நெய்யில் கடுகு, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டவும்.
சப்பாத்தி - ஆனியன் மசாலா
தேவையானவை: சப்பாத்தி - 4, வெங்காயம், தக்காளி - தலா 1, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் - தலா ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், இஞ்சி-பூண்டு விழுது - தலா அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் வெங்காயத்தைப் போட்டு, சிறிது வதங்கியதும், இஞ்சி -பூண்டு விழுது, தக்காளி சேர்க்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறி, சப்பாத்திகளைப் பிய்த்துப் போட்டு, நன்றாக வதக்கி இறக்கவும்.
ரைஸ் வெஜ் ஆம்லெட்
தேவையானவை: நன்றாக மசித்த சாதம் - ஒரு பெரிய பவுல், கடலை மாவு - 75 கிராம், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், புளித்த தயிர் - 100 கிராம், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: மசித்த சாதத்துடன் கடலை மாவு, புளித்த தயிர், மிளகாய்த்தூள், உப்பு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சித் துருவல், பெருங்காயத்தூள் சேர்த்து நன்றாகக் கலந்து, இட்லி மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லில் சிறிது எண்ணெய் விட்டு, கரைத்த மாவை ஊற்றி, மூடி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
ரைஸ் பக்கோடா
தேவையானவை: சாதம் - ஒரு பவுல், பொட்டுக்கடலை மாவு - 2 டீஸ்பூன், வெங்காயம் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு... பொட்டுக் கடலை மாவு, நறுக்கிய வெங் காயம், கொத்தமல்லி, கறிவேப் பிலை, இஞ்சித் துருவல், உப்பு, மிளகாய்தூள் சேர்த்து நன்கு பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை பக்கோடாக்களாகப் போட்டு பொரித்தெடுக்கவும்.
புடலங்காய் பச்சடி
தேவையானவை: புடலங்காய் பொரியல் - 3 டேபிள்ஸ்பூன், தயிர் - 150 கிராம், நறுக்கிய பச்சை மிளகாய் - 2, கடுகு, எண்ணெய் - தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், ஊற வைத்த பயத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், உப்பு - ஒரு சிட்டிகை.
செய்முறை: புடலங்காய் பொரியலுடன் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், ஊற வைத்த பயத்தம்பருப்பு, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். இந்த விழுதை தயிரில் சேர்த்து, எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டி பரிமாறவும்.
இடியாப்ப புலாவ்
தேவையானவை: இடியாப்பம் - 6, வெங்காயம், தக்காளி, கிராம்பு - தலா 1, பட்டை - ஒரு சிறிய துண்டு, கீறிய பச்சை மிளகாய் - 2, கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு தாளித்து, பச்சை மிளகாயை சேர்க்கவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, இடியாப்பத்தை சிறிது சிறிதாக பிய்த்துப் போட்டு உப்பு சேர்க்கவும். நன்றாகக் கலந்து கிளறி... கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து இறக்கவும்.
தோசை புளியோதரை
தேவையானவை: தோசை - 6, இன்ஸ்டன்ட் புளியோதரைப் பொடி - 4 டீஸ்பூன், கடுகு - 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: தோசைகளை சிறு சிறு துண்டுகளாக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தளித்து.... தோசை துண்டுகள், புளியோதரைப் பொடி, உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர்
விட்டு கிளறவும். கெட்டியானவுடன் இறக்கவும்.
இட்லி 65
தேவையானவை: இட்லி - 8 (நீளவாக்கில் நறுக்கவும்), தக்காளி - 3, வெங்காயம் - 1, சோம்பு - கால் டீஸ்பூன், கொத்தமல்லி, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும். கடாயில்எண்ணெய் ஊற்றி காய வைத்து, நறுக்கிய இட்லிகளைப் போட்டு பொரித்து தனியாக வைக்கவும். தக்காளியை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கி... தக்காளி விழுது, உப்பு சேர்த்து, கலவை கெட்டியாகும்போது பொரித்த இட்லித் துண்டுகளைப் போட்டு நன்கு கிளறி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
காய்கறி கலவை எரிசேரி
தேவையானவை: விருந்து, விசேஷங்களின்போது அதிகப்படியாக இருக்கும் குழம்பு, ரசம், பொரியல் கலவை, நல்லெண்ணெய், நெய் - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய், நெய் தவிர கொடுத்துள்ள எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக சுண்டியதும் நல்லெண்ணெய், நெய் சேர்த்து மேலும் கொதிக்க வைத்து இறக்கவும்.
இட்லி உப்புமா
தேவையானவை: இட்லி - 10, கடுகு, உளுத்தம்பருப்பு, - தலா ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாய் - 3, வேர்க்கடலை, எண்ணெய், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: இட்லிகளை நன்றாக உதிர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காயந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து... பச்சை மிளகாய் (அ) காய்ந்த மிளகாயைக் கிள்ளிப் போட்டு உப்பு சேர்க்கவும். உதிர்த்து வைத்துள்ள இட்லிகளை சேர்த்துக் கிளறி இறக்கவும்.
காய்கறி கட்லெட்
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து, தோல் உரித்து, மசிக்கவும்), ஏதேனும் ஒரு பொரியல் - சிறிதளவு, பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கவும்), சோள மாவு - ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டு - 3 (தண்ணீரில் முக்கி, உடனே எடுத்து வைக்கவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: பொரியல், மசித்த உருளைக்கிழங்கு, பச்சை மிளகாய், உப்பு, பிரெட், சோள மாவு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து நன்றாகப் பிசைந்து, கட்லெட்டுகளாக செய்யவும். இவற்றை தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, இருபுறமும் பொன்னிறமானதும் எடுக்கவும்.
உப்புமா பக்கோடா
தேவையானவை: முந்திரித் துண்டுகள் - 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், உப்புமா, எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை: உப்புமாவில் முந்திரித் துண்டுகள், மிளகாய்த்தூள் சேர்த்து கரண்டியால் கிளறவும். கடாயில் எண்ணெய் விட்டு காய வைத்து, கிளறி வைத்த கலவையிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து பக்கோடாக்களாக கிள்ளிப் போட்டு பொரித்தெடுக்கவும்.
தால் பான் கேக்
தேவையானவை: வெந்த பருப்பு, கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு - தலா 100 கிராம், பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள், மஞ்சள் தூள் - தலா அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: எண்ணெய் தவிர, கொடுக்கப்பட்டுள்ள எல்லாவற் றையும் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை காய வைத்து, மாவை ஊற்றி, சுற்றிலும் எண்ணெய் விட்டு, மூடி போட்டு வேகவிட்டு எடுத்து, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
ஆவக்காய் சாறு ஊறுகாய்
தேவையானவை: மாங்காய் - 2 (பொடியாக நறுக்கவும்), கடுகு - அரை டீஸ்பூன், ஆவக்காய் ஊறுகாய் சாறு, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, மாங்காயை சேர்த்து சுருள வதக்கி ஆறவிடவும். இதில் ஆவக்காய் ஊறுகாய் சாறு சேர்த்துக் கலக்கவும்.
உப்புமா அடை
தேவையானவை: உப்புமா - ஒரு பெரிய பவுல், காய்ந்த மிளகாய் - 4, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 50 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், உப்பு ஆகியவற்றை மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும். இதில் சுடு நீரை ஊற்றி, 10 நிமிடம் ஊற வைக்கவும். ஊறியதும் உப்புமாவை சேர்த்து அடை பக்குவத்தில் கரைக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, இருபுறமும் எண்ணெய்
விட்டு, பொன்னிற அடைகளாக சுட்டெடுக்கவும்.
டேஸ்ட்டி ரைஸ்
தேவையானவை: சாதம் - ஒரு பவுல், பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு, எள், நறுக்கிய பச்சை மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - இரண்டு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, உளுத்தம்பருப்பு, தனியா, மிளகு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கியவுடன் எள், பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து மேலும் வதக்கி... சாதம், உப்பு, கரம் மசாலாத்தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கி, சூடாக பரிமாறவும்.
Post a Comment