BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Friday, August 9, 2013

30 வகை சைட் டிஷ்!

30 வகை சைட் டிஷ்!


வெண்டைக்காய் சப்ஜி
(ஒரிஸ்ஸா ஸ்பெஷல்)

தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, பெரிய வெங்காயம் – 4, தக்காளி – 2, பூண்டு – 4 அல்லது 5 பல், சீரகம் – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 3 அல்லது 4, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 4 டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காய் சிறியதாக இருந்தால் அதை அப்படியே எடுத்துக் கொள்ளவும். பெரியதாக இருந்தால் இரண்டாக நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெண்டைக்காயை வதக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, சீரகம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். மீண்டும் எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருக்கும் மசாலாவை வாசனை போகும் வரை சுருள வதக்கிக் கொள்ளவும்.
பிறகு வதக்கி வைத்திருக்கும் வெண்டைக்காயை சேர்க்கவும். அதில், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கிளறவும். இது கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம். இந்த கிரேவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கவும். இதே போல் கோவைக்காயிலும் சப்ஜி செய்யலாம்.
——————————————————————————–
கத்தரிக்காய் ஸ்டஃப்டு வதக்கல்

தேவையானவை: கத்தரிக்காய் – கால் கிலோ, இஞ்சி – பெரிய துண்டு, பச்சைமிளகாய் – 2 அல்லது 3, கொத்தமல்லி – ஒரு சிறிய கட்டு, கடுகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 அல்லது 5 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கத்தரிக்காயை ஸ்டஃப் செய்யவதற்கு ஏற்ற வகையில் வெட்டி, லேசாக வேக வைக்கவும். இஞ்சி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை தண்ணீர் விடாமல் அரைத்து, அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். இந்தக் கலவையை கத்தரிக்காயின் உள்ளே அடைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு தாளித்து அதில் மசாலா அடைத்து வைத்துள்ள கத்தரிக்காய்களை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து சுருள வதக்கவும்.
காராமணி சப்ஜி

தேவையானவை: காராமணி – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 3, பச்சைமிளகாய் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 பல், கொத்தமல்லி, பட்டை – சிறிதளவு, சோம்பு – அரை டீஸ்பூன், பெரிய ஏலக்காய் – 2, கிராம்பு – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி – அரை டீஸ்பூன், தனியாதூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காராமணியை நன்றாக கழுவி, ஒரு அங்குல நீள துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்து, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். நான்கு துண்டு வெங்காயம், பூண்டு, இஞ்சி, பட்டை, சோம்பு, ஏலக்காய், கிராம்பு, பச்சைமிளகாய் ஆகியவற்றை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். இதை சிறிது எண்ணெய் விட்டு வதக்கி வைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை பொடியாக நறுக்கி, எண்ணெயில் வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். நறுக்கி வைத்திருக்கும் காராமணியை பச்சை வாசனை போகும் வரை வதக்கி, தண்ணீர் சேர்த்து அதில் மஞ்சள்தூள், உப்பு, ஆம்சூர் பொடி, தனியாதூள் ஆகியவற்றை சேர்க்கவும். காராமணி வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் மசாலா கலவை, வதக்கிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து கிளறி ஐந்து நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
——————————————————————————–
கோஸ் மசாலா

தேவையானவை: முட்டைகோஸ் – அரை கிலோ, பொடியாக நறுக்கிய வெங்காயம் – ஒரு கப், தக்காளி – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 2, பச்சைமிளகாய் – 1, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு, பட்டை – 4 துண்டு, கிராம்பு – 2, கருஞ்சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவை யான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம் 2 டீஸ்பூன் ஆகியவற்றை நைஸாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கிராம்பு, கருஞ்சீரகத்தை எண்ணெய் விடாமல் வறுத்து, பொடித்துக் கொள்ளவும்.
உருளைக்கிழங்கையும் வெங்காயத்தையும் தனித்தனியாக எண்ணெயில் வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் முட்டை கோஸ் போட்டு வதக்கி, அதில் இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து வேக விடவும். நன்றாக வெந்ததும் வதக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கையும் பொடித்து வைத்திருக்கும் மசாலாவையும் சேர்த்துக் கிளறவும். கடைசியில் பொடியாக நறுக்கிய தக்காளி, வதக்கிய வெங்காயம், கொத்தமல்லியை சேர்த்து, ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.
சுரைக்காய் கோஃப்தா
தேவையானவை: சுரைக்காய் – அரை கிலோ, பனீர் – 200 கிராம், சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 3, கடலைமாவு – ஒரு கப், இஞ்சி – ஒரு துண்டு, தனியாதூள் – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சுரைக்காயை தோல் சீவி துருவிக் கொள்ளவும். பனீரை உதிர்த்துக் கொள்ளவும். சுரைக்காய், பனீர் இவற்றுடன் கடலைமாவு, சீரகத்தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் ஆகியவற்றை சேர்த்து பிசைந்து கொள்ளவும். அவற்றை உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் பொரித்தெடுத்து தனியாக வைக்கவும்.
கிரேவி செய்ய தேவையானவை: பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 4, பூண்டு – 4 பல், காய்ந்த மிளகாய் – 2, சீரகம் – கால் டீஸ்பூன், துருவிய இஞ்சி – சிறிதளவு, தனியாதூள், மஞ்சள்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, தக்காளியை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெறும் கடாயில் காய்ந்த மிளகாய், சீரகத்தை வறுத்து நைஸாக பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து சுருள வதக்கவும். பிறகு பொடித்து வைத்திருக்கும் மசாலா பொடியை சேர்க்கவும். அதில் சிறிது தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், தனியாதூள் போட்டு மிதமான தீயில் கொதிக்க விடவும். பிறகு பொரித்து வைத்திருக்கும் கோஃப்தாக்களைப் போட்டு கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
——————————————————————————–
முள்ளங்கி மசாலா கறி
தேவையானவை: வெள்ளை முள்ளங்கி – அரை கிலோ, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 1, இஞ்சி – ஒரு துண்டு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கி, உருளைக்கிழங்கை வேக வைத்து கைகளால் பொடிமாஸ் போல் உதிர்த்துக் கொள்ளவும். வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்கவும்.
உதிர்த்து வைத்திருக்கும் முள்ளங்கி, உருளைக்கிழங்கை சேர்க்கவும். பிறகு உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கிளறவும். கடைசியில் கரம் மசாலாத்தூள் சேர்த்து, ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கிளறவும். கொத்தமல்லியைத் தூவி பரிமாறவும்.
முள்ளங்கி இலை கறி
தேவையானவை: வெள்ளை முள்ளங்கி இலை – ஒரு சிறிய கட்டு, பச்சைமிளகாய் – 2, வெங்காயம் – 2, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – கால் டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முள்ளங்கி இலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, சீரகத்தை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், நீளவாக்கில் கீறிய பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு முள்ளங்கி இலையை போட்டு, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து சுருள கிளறி இறக்கவும்.
——————————————————————————–
கோவைக்காய் – உருளை வதக்கல்
தேவையானவை: கோவைக்காய் – அரை கிலோ, உருளைக்கிழங்கு – 2, மிளகாய்த்தூள் – ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள், கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: கோவைக்காயையும் உருளைக்கிழங்கையும் நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அதில் கோவைக்காய், உருளைக்கிழங்கை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் தெளித்து மூடவும். இடையிடையே நீர் தெளித்து நன்றாக வேக விடவும். கடைசியில் தேவைப்பட்டால் சிறிது எண்ணெய் விட்டு சுருள வதக்கவும்.பீன்ஸ் சப்ஜி
தேவையானவை: பீன்ஸ் – கால் கிலோ, வெங்காயம் – 2, பூண்டு – 2 பல், காய்ந்த மிளகாய் – 2, தனியா – ஒரு டீஸ்பூன், பட்டை – 2 துண்டு, சோம்பு, கசகசா – தலா ஒரு டீஸ்பூன், வெல்லம் – ஒரு சிறிய கட்டி, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பீன்ஸ் மற்றும் வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், தனியா, பட்டை, சோம்பு, கசகசாவை சிறிது எண்ணெயில் வறுத்து, புளி சேர்த்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் இரண்டு பல் பூண்டை தட்டிப் போட்டு, பொடியாக நறுக்கிய வெங்காயத்தைப் போடவும். வெங்காயம் வதங்கியதும் பொடியாக நறுக்கிய பீன்ஸை சேர்க்கவும். சிறிது வதக்கியதும் அரைத்து வைத்துள்ள மசாலா, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து தண்ணீர் விட்டு வேக விடவும். பீன்ஸ் நன்றாக வெந்ததும் சிறு துண்டு வெல்லம் சேர்க்கவும். காரம் தூக்கலாக தேவைப்பட்டால் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.
கடைசியில் சிறிதளவு நெய் விட்டால் நன்றாக இருக்கும்.
——————————————————————————–
பீட்ரூட் மசாலா கறி
தேவையானவை: பீட்ரூட் – கால் கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மிளகுத்தூள் – முக்கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, சோம்பு தாளித்து, வெங்காயம், தக்காளி இரண்டையும் வதக்கிக் கொள்ளவும். நறுக்கிய பீட்ரூட்டை போட்டு வேகும் அளவுக்கு சிறிது தண்ணீர் சேர்த்து மூடவும். காய் நன்றாக வெந்ததும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து மிளகுத்தூளை போட்டு 5 நிமிடம் வதக்கவும். காரம் தேவைப்பட்டால் மேலும் சிறிது மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.புடலங்காய்-புதினா மசாலா
தேவையானவை: புடலங்காய் – கால் கிலோ, புதினா இலைகள் – 2 டீஸ்பூன், வெங்காயம் – 2, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், ஏலக்காய் – 2, கிராம்பு – 2 அல்லது 3, ஒமம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பொட்டுக்கடலை – அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: புடலங்காயை விரல் நீளத்துக்கு நறுக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை அரைத்துக் கொள்ளவும். தேங்காய் துருவல், பொட்டுக்கடலையை தனியாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு சோம்பு, ஏலக்காய், கிராம்பு, ஓமம், வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். அதில் புடலங்காயை சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு வேக விடவும்.
மஞ்சள்தூள், உப்பு, பொட்டுக்கடலை – தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும். இறக்கும் சமயத்தில் புதினா இலையை பொடியாக நறுக்கி சேர்த்து பரிமாறவும்.
——————————————————————————–
கேரட் – பனீர் குருமா
தேவையானவை: கேரட் – கால் கிலோ, பனீர் – அரை கப், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், வெங்காயம் – 4, தக்காளி – 4, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சோம்பு – ஒரு டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, பிரிஞ்சி இலை – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கேரட்டை அவியலுக்கு நறுக்குவது போல் நீளமாகவும், வெங்காயத்தை பொடியாகவும் நறுக்கவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு தாளித்து, சிறிது வெங்காயத்துடன் அரைத்து வைத்துள்ள விழுதுப் போட்டு வதக்கவும். கேரட், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சிறிது தண்ணீர் விட்டு வேக விடவும். தக்காளி, மீதமுள்ள வெங்காயம் இரண்டையும் லேசாக வதக்கி சேர்க்கவும். பட்டை, ஏலக்காய், கிராம்பை பொடித்து இதில் கலக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம். கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்றாக கொதிக்கவிடவும். இறுதியில் பனீரை சிறு துண்டுகளாக நறுக்கி, வதக்கி சேர்க்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.ஆலு கடுகு சப்ஜி
தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, காய்ந்த மிளகாய் – 5, கடுகு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், எண்ணெய் – 4 டீஸ்பூன், தக்காளி – 2, கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கவும். கடுகு, மிளகாய் இரண்டையும் அம்மியில் வைத்து அரைக்கவும் (இது மிக்ஸியில் சரியாக அரைபடாது). கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை நன்றாக வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விடவும். அரைத்து வைத்திருக்கும் விழுதை அதில் கொட்டிக் கிளறவும். நன்றாக கொதித்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.
——————————————————————————–
ஆலு-மட்டர்-பனீர் மசாலா
தேவையானவை: உருளைக்-கிழங்கு – அரை கிலோ, உரித்த பச்சை பட்டாணி – ஒரு கப், தக்காளி – 4, பனீர் (அ) சீஸ் – அரை கப், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரிஞ்சி இலை – 1, பூண்டு – 5 பல், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 3, வெங்காயம் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து ஒன்றிரண்டாக உதிர்க்கவும். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். பனீரை சிறு துண்டுகளாக நறுக்கவும். ஏலக்காய், பூண்டு, இஞ்சி, பச்சைமிளகாய், நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயத்தை வதக்கி தனியே வைக்கவும். வெறும் கடாயில் பனீர் துண்டுகளை சிவக்க வறுக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் விட்டு பிரிஞ்சி இலை, பட்டாணியை வதக்கி, அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். தக்காளியை சேர்த்து சுருள கிளறவும். தக்காளி வதங்கியதும் உதிர்த்த உருளைக்கிழங்கை சேர்க்கவும்.
பிறகு தண்ணீர் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடி போட்டு கொதிக்க விடவும். கிரேவி கெட்டியாகும்போது பனீர் துண்டுகள், வெங்காயத்தை சேர்த்துக் கிளறி, கொதி வந்ததும் இறக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
உருளை-பட்டாணி மசாலா
தேவையானவை: வெங்காயம் – 2, உருளைக்கிழங்கு – 5, பச்சை பட்டாணி – அரை கப், தக்காளி – 2, பூண்டு – 4 பல், இஞ்சி – ஒரு துண்டு, கொத்தமல்லி – சிறிதளவு, பச்சைமிளகாய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், கிராம்பு – 2, பட்டை – 4, 5 துண்டுகள், பிரிஞ்சி இலை – 2, கடுகு – அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2 மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, பிரிஞ்சி இலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதில் இஞ்சி, பூண்டு பச்சை மிளகாய், சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டையை அரைத்து சேர்த்துக் கிளறி, பச்சை பட்டாணி, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி உருளைக்கிழங்கை கையால் உதிர்த்து சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாக கலந்து கிளறி, கொத்த மல்லியை தூவி பரிமாறவும்.
——————————————————————————–
ஆலு-மட்டர் தால்
தேவையானவை: துவரம்பருப்பு – கால் கிலோ, சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், சீரகத்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன், வெங்காயம் – 2, பூண்டு – 6 பல், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 2, பட்டாணி – அரை கப், பொடியாக நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பருப்பு, உருளைக்கிழங்கு, பட்டாணியை குக்கரில் மசிய வேக வைத்துக் கொள்ளவும். வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சைமிளகாயை தனித்தனியே பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும், சோம்பு, பூண்டை வதக்கி, வெங்காயத்தையும் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். இதனுடன் வெந்த பருப்பையும் சேர்க்கவும். உருளைக் கிழங்கை மசித்து போடவும். பிறகு மஞ்சள்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறி, ஒரு கொதி வந்ததும் தக்காளியை சேர்க்கவும். நன்றாக கொதித்ததும் இறக்கவும். இது கரண்டியால் எடுத்து விடும் அளவுக்கு நீர்க்க இருத்தல் வேண்டும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
உருளைக்கிழங்கு மசியல்
தேவையானவை: உருளைக்கிழங்கு – அரை கிலோ, பெரிய எலுமிச்சம் பழம் – 1, கசகசா – ஒரு டீஸ்பூன், தேங்காய், – ஒரு சிறிய மூடி, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து மசிக்கவும். தேங்காய், கசகசாவை அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாயை தாளித்து, மசித்த உருளைக்கிழங்கு, உப்பு, மஞ்சள்தூள் சேர்க்கவும். கரண்டியால் எடுத்து விடும் பதத்துக்கு தண்ணீர் சேர்க்கவும். இரண்டு கொதி வந்ததும் தேங்காய், கசகசா விழுது, கொத்தமல்லி சேர்க்கவும். பிறகு, இரண்டு கொதி வந்ததும் இறக்கி, எலுமிச்சை சாறு சேர்த்து பரிமாறவும்.
நவரத்ன குருமா
தேவையானவை: வெங்காயம் – 2, தக்காளி – 3, பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 4 பல், சர்க்கரை – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், உருளைக்கிழங்கு – 2, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், பீன்ஸ் – சிறிதளவு, கேரட் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் மூன்றையும் நைஸாக அரைத்துக் கொள்ளவும். பிறகு கசகசா, முந்திரிப்பருப்பு இரண்டையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
பட்டாணி, உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் அனைத்தையும் ஒரே அளவில் நறுக்கி, வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, அரைத்து வைத்துள்ள இஞ்சி – பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். அரைத்த தக்காளியை சேர்த்து கொதிக்க விடவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதி வந்ததும் வெந்த காய்களை சேர்க்கவும்.
இதில் கசகசா, முந்திரிப்பருப்பு விழுது, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். தனியாக ஒரு கடாயில் முந்திரியை வறுத்து இதனுடன் சேர்க்கவும். கொத்தமல்லி தூவி இறக்கவும்.
——————————————————————————–
முருங்கை தால்
தேவையானவை: முருங்கைக்காய் – 7 அல்லது 8, துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வெங்காயம் – 2, தக்காளி – 2, உருளைக்கிழங்கு – 1, இஞ்சி – ஒரு துண்டு, பச்சைமிளகாய் – 2, பூண்டு – 2 பல், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக்காயைச் சாம்பாருக்கு நறுக்குவது போல் நறுக்கிக் கொள்ளவும். துவரம்பருப்பு, முருங்கைக்காய், உருளைக்கிழங்கை வேக வைக்கவும். வெந்த முருங்கைத் துண்டுகளில் இருக்கும் சதைப் பகுதியை ஒரு ஸ்பூனால் எடுத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை தோல் உரித்து உதிர்த்துக் கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாயை வதக்கி, அதில் தக்காளி, முருங்கைக்காயின் சதைப் பகுதி, துவரம்பருப்பைப் போட்டு உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் சேர்க்கவும். உதிர்த்து வைத்த உருளைக்கிழங்கை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
பச்சை பயறு குருமா
தேவையானவை: பச்சை பயறு – அரை கப், உருளைக்கிழங்கு – 2, கொத்தமல்லி – சிறிதளவு, வெங்காயம் – 2, தக்காளி – 1, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 2 பல், பச்சைமிளகாய் – 2, பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி இலை – 1, கிராம்பு – 2, ஏலக்காய் – 2, சோம்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: பச்சை பயறை ஊற வைத்து முளைக் கட்டவும். ஊறிய பயறை மெல்லிய துணியில் மூட்டையாக கட்டி, கொதிக்கும் நீரில் அரை மணி நேரம் போடவும். இப்படி செய்வதால் பயறு அரை வேக்காடாக வெந்துவிடும். உருளைக்கிழங்கை வேக வைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், தட்டிய இஞ்சி, பூண்டு, கீறிய பச்சைமிளகாய், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு பச்சை பயறையும் சேர்த்து வதக்கி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் வேக வைத்த உருளைக்கிழங்கை சதுரமாக நறுக்கி சேர்க்கவும். தேவைப்பட்டால் காரப்பொடி சேர்த்துக் கொள்ளலாம். தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கடைசியில் சேர்க்கவும்.
——————————————————————————–
வெண்டை – உருளை கிரேவி
தேவையானவை: வெண்டைக்காய் – கால் கிலோ, உருளைக்கிழங்கு – 2, தக்காளி – 1, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, மிளகுத்தூள் – அரை டீஸ்பூன், தனியாத்தூள் – அரை டீஸ்பூன், ஆம்சூர் பொடி- அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: வெண்டைக்காயை கழுவி, பெரியதாக இருந்தால் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும். சிறியதாக இருந்தால் அப்படியே மேல்புறம் லேசாக கீறிக் கொள்ளவும். ஈரம் காய்ந்ததும் எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை வேக வைத்து உரித்து, சிறு சதுர துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, பிரிஞ்சி இலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும். இதில் பொரித்த வெண்டைக்காய் (எண்ணையை நன்றாக வடித்துக் கொள்ளவும்), வதக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து உப்பு, மஞ்சள்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், தனியாத்தூள், ஆம்சூர் பொடி, பொடியாக நறுக்கிய தக்காளி இவற்றை சேர்த்து வதக்கவும். கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
சௌசௌ சப்ஜி
தேவையானவை: சௌசௌ – 2, உருளைக்கிழங்கு – 1, வெங்காயம் – 2, பச்சை பட்டாணி – அரை கப் , இஞ்சி – ஒரு துண்டு, கறிவேப்பிலை – சிறிதளவு, தேங்காய்துருவல் – 3 டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கடலைப்பருப்பு – அரை டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: சௌசௌவை பொடியாக நறுக்கவும். பச்சை பட்டாணியையும் உருளைகிழங்கையும் வேக வைக்கவும். தேங்காய்துருவல், சீரகம், இஞ்சி, பச்சை மிளகாயை அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். இதில் வேக வைத்துள்ள காய்கறிகளையும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் சேர்த்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.
——————————————————————————–
உருளை நவதான்ய மசாலா
தேவையானவை: காய்ந்த பச்சை பட்டாணி, வெள்ளை பட்டாணி, ராஜ்மா, காராமணி, மொச்சை, பச்சை பயறு, வெள்ளை கொண்டைக்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, பீன்ஸ் விதை – தலா ஒரு டேபிள்ஸ்பூன், உருளைக்கிழங்கு, தக்காளி – தலா 2, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 4 அல்லது 5 பல், பச்சைமிளகாய், வெங்காயம் – தலா 2, பட்டை – 2 துண்டு, சிறிய ஏலக்காய், பெரிய ஏலக்காய், கிராம்பு – தலா 2, சோம்பு, கசகசா – தலா அரை டீஸ்பூன், தேங்காய் துருவல் – 3 டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 1, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி – சிறிதளவு, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள கடலைகளை முதல் நாளே ஊற வைத்துக் கொள்ளவும். உருளைகிழங்குடன் கடலைகளை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை போட்டு, நறுக்கிய வெங்காயத்தில் பாதியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.
பட்டை, கிராம்பு, சோம்பு, ஏலக்காய், பெரிய ஏலக்காய், கசகசா, தேங்காய் இவற்றை அரைத்து சேர்க்கவும். வேக வைத்துள்ள கடலைகளையும் சேர்க்கவும். உப்பு, மஞ்சள்தூள், கரம் மசாலாத்தூள் போட்டு, நன்கு கொதித்தவுடன் உருளைக்-கிழங்கை உதிர்த்து சேர்க்கவும்.
பரிமாறும்போது பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி தூவவும். தேவைப்பட்டால் எலுமிச்சை சாறு பிழிந்து கொள்ளலாம்.ஆலு தம்
தேவையானவை: சிறிய உருளைக்கிழங்கு – அரை கிலோ, தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 4 அல்லது 5, இஞ்சி – ஒரு துண்டு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பட்டை – 4 துண்டு, பூண்டு – 4 பல், வெங்காயம் – 1, பெரிய ஏலக்காய் – 2, கிராம்பு – 4, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து முழுதாக உரித்து வைக்கவும். தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், இஞ்சி, சீரகம், பட்டை, பூண்டு பல், வெங்காயத்தை விழுதாக அரைத்துக் கொள்ளவும். பெரிய ஏலக்காய், கிராம்பு இரண்டையும் எண்ணெய் விடாமல் வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தக்காளி, மஞ்சள்தூள் போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும், வேக வைத்த உருளைக்கிழங்கு, உப்பு போட்டு நன்கு கிளறவும். அரைத்த மசாலாவை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி கிராம்பு, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். சிறிது தண்ணீர் விட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும். இது, கரண்டியால் எடுத்து விட்டுக் கொள்ளும் பதத்துக்கு இருக்க வேண்டும்.
——————————————————————————–
காய்கறி ஸ்பெஷல் மசாலா
தேவையானவை: சர்க்கரை வள்ளிக் கிழங்கு – 2, நறுக்கிய கொத்தவரங்காய் – அரை கப், அவரைக்காய் – கால் கப், சேப்பங்கிழங்கு – கால் கப், கத்தரிக்காய் – கால் கப், பரங்கிக்காய் – அரை கப், பூசணிக்காய் – கால் கப், கறிவேப்பிலை – சிறிது, புளி – நெல்லிக்காய் அளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, தனியா, மிளகு – தலா அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சமையல் எண்ணெய் – 2 டீஸ்பூன், தேங்காய்துருவல் – அரை கப், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: எல்லா காய்களையும் புளி தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து பதமாக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் சீரகம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், தேங்காய்துருவல், தனியா, மிளகு போட்டு வறுத்து, அரைத்து, வெந்து கொண்டிருக்கும் காய்கறிகளுடன் சேர்க்கவும். அதில் கரம் மசாலாத்தூள் போடவும். நன்றாக கொதித்ததும் கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். மேலே சிறிது நெய் விட்டு பரிமாறவும்.ஸ்பெஷல் கலவை மசாலா கறி
தேவையானவை: காலிஃப்ளவர் அல்லது முட்டைகோஸ் – கால் கிலோ, பட்டாணி அல்லது பீன்ஸ் – ஒரு டேபிள்ஸ்பூன், சிறிய கேரட் – 2, வெங்காயம் – 2, குடைமிளகாய் – 2, கறிவேப்பிலை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, தனியா – அரை டீஸ்பூன், பெரிய ஏலக்காய் – 1, கிராம்பு – 2, சின்ன ஏலக்காய் – 2, பட்டை – 1 துண்டு, சோம்பு – கால் டீஸ்பூன், மிளகு – கால் டீஸ்பூன், சீரகத்தூள், கடுகு, சுக்கு – தலா கால் டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன், தாளிக்க சீரகம் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். கடுகை தவிர மற்ற மசாலா பொருட்களை வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம், கறிவேப்பிலை தாளித்து வெங் காயத்தை பொன்னிறமாக வதக்கி, காய்கறி களை சேர்க்கவும். சிறிது வதங்கியதும் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து தண்ணீர் தெளித்து சுருள வதக்கவும். காய்கள் முக்கால் பதம் வெந்ததும் பொடித்த மசாலாவை சேர்க்கவும். மசாலா நன்கு சேர்ந்து வந்ததும் இறக்கவும்.
——————————————————————————–
காலிஃப்ளவர் பெங்காலி சப்ஜி
தேவையானவை: நடுத்தர காலிஃப்ளவர் – 2, தக்காளி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, இஞ்சி துருவல் – சிறிதளவு, ஆம்சூர் பொடி – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், சீரகத்தூள் – 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் – சிறிதளவு, பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை நறுக்காமல் கையால் சிறு துண்டுகளாக ஆய்ந்து கொள்ளவும். சிறிது உப்பு கலந்து மிதமான வெந்நீரில் இருபது நிமிடம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, உரித்து பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் உருளைக்கிழங்கை சிவக்கும் வரை வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். 4 டீஸ்பூன் எண்ணெயில் காலிஃப்ளவரை பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் காய்ந்ததும் தேங்காய்துருவல், சீரகத்தூளை சேர்த்து, காலிஃப்ளவர், தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள், ஆம்சூர் பொடியை சேர்க்கவும். கலவை வெந்ததும் பச்சை பட்டாணியை சேர்த்துக் கிளறவும். நன்றாகக் கொதி வந்ததும் உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய தக்காளி, கொத்தமல்லியை சேர்த்து 5 நிமிடத்துக்குப் பிறகு இறக்கவும்.
——————————————————————————–முருங்கை மசாலா சப்ஜி

தேவையானவை: நன்கு முற்றிய முருங்கைக்காய் – 10 அல்லது 15, தக்காளி – 1, பெரிய உருளைக்கிழங்கு – 2, இஞ்சி – ஒரு துண்டு, காய்ந்த மிளகாய் – 2, பூண்டு – 4 பல், கொத்தமல்லி – சிறிதளவு, பிரிஞ்சி இலை – 2, பட்டை – சிறு துண்டு, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், பெரிய ஏலம் – 2, கிராம்பு – 2, ஆம்சூர் பொடி – ஒரு டீஸ்பூன், பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: முருங்கைக் காயை நன்கு கழுவியதும், சாம்பாருக்கு வெட்டுவது போல் வெட்டி, குக்கரில் வேக வைக்கவும். இஞ்சி, பூண்டு, காய்ந்த மிளகாயைத் தனியாக அரைத்துக் கொள்ளவும். பட்டை, கசகசா, கிராம்பு மற்றும் ஏலக்காயை எண்ணெய் விடாமல் லேசாக வறுத்துப் பொடித்து வைத்துக் கொள்ளவும். இந்த மசாலாத்தூள் நல்ல வாசனையாக இருக்கும். வெந்த முருங்கைக்காயின் சதைப்பகுதியை மட்டும் ஒரு கத்தியால் கீறி எடுக்கவும். இதைத் தனியாக ஒரு கிண்ணத்தில் வைக்கவும்.
உருளைக்கிழங்கை தோல் உரித்து கையால் ஒன்றிரண்டாக மசித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலையைக் கிள்ளிப் போட்டு சிவக்க விடவும். இஞ்சி, பூண்டு விழுதைப் போட்டு, பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பிறகு அதில் உருளைக்கிழங்கு, முருங்கைக் கலவை, பச்சை பட்டாணி, பொடித்து வைத்த மசாலாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடி பிடிக்காமல் கிளறவும். தீயை குறைத்து உப்பு, கரம் மசாலாத்தூள், ஆம்சூர் பொடியை போட்டு நன்றாக கலக்கவும். தக்காளி யையும் கொத்துமல்லியையும் பொடிப்பொடியாக நறுக்கி போட்டு நன்றாகக் கலந்து, பட்டாணி வெந்ததும் இரண்டு நிமிடம் கொதிக்க விட்டு இறக்கவும்.
——————————————————————————–
காலிஃப்ளவர் மசாலா சப்ஜி

தேவையானவை: நடுத்தர காலிஃப்ளவர் – 2, தக்காளி – கால் கிலோ, உருளைக்கிழங்கு – கால் கிலோ, இஞ்சித் துருவல் – சிறிதளவு, கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் – 2, பூண்டு – 7 அல்லது 8 பல், வெங்காயம் – 4, கிராம்பு – 4, தனியாத்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், – தலா ஒரு டீஸ்பூன், பச்சை பட்டாணி – ஒரு டீஸ்பூன், ஏலக்காய் – 2, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: காலிஃப்ளவரை கைகளால் ஆய்ந்து, உப்பு கலந்த மிதமான வெந்நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் சிறிதளவு, இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய், ஏலக்காய், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். மீதமுள்ள வெங்காயத்தை எண்ணெய் விட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் கலவையை விட்டு மசாலா விழுதைப் போட்டு சுருளாக வதக்கிக் கொள்ளவும். உருளையை சிவக்க வதக்கி காலிஃப்ளவரைப் போட்டுக் கிளறவும். மசாலா விழுது, உப்பு, மஞ்சள்தூள், தனியாத்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் வீட்டு அடுப்பை ‘சிம்’மில் வைத்து மூடவும். நன்றாக கொதித்ததும் பட்டாணி சேர்த்துக் கிளறவும். வதக்கிய வெங்காயத்தைச் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க விடவும். கூட்டு மாதிரி வரும். பிறகு இறக்கி நறுக்கிய தக்காளி, கொத்தமல்லியால் அலங்கரிக்கவும்.சின்ன வெங்காயம் – தக்காளி மசாலா

தேவையானவை: சின்ன வெங்காயம், தக்காளி – கால் கிலோ, பச்சை மிளகாய் – 2, கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், பிரிஞ்சி இலை – 2, சர்க்கரை – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – 2 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: வெங்காயத்தை உரித்துக் கொள்ளவும். இதில் பாதி எடுத்து தக்காளி சேர்த்து லேசாக வதக்கி அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பிரிஞ்சி இலை, மீதமுள்ள வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும். முழு பச்சைமிளகாயை சேர்க்கவும். இந்த வதக்கலுடன் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்க்கவும். மஞ்சள்தூள், உப்பு, கரம் மசாலாத்தூள், சர்க்கரை சேர்த்து கிளறி நன்கு கொதி வந்ததும் இறக்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடலாம். காரம் தேவைப்பட்டால் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்
=http://shanthisivalingam.blogspot.in-

Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX