இஞ்சிப் பச்சடி
தேவையானவை: இஞ்சி – 100 கிராம், புளி – சிறிதளவு, எலுமிச்சை – 4, பெரிய வெங்காயம் – 2, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: தோல் நீக்கிய இஞ்சியுடன் புளி சேர்த்து நன்றாக அரைக்கவும். இதனுடன் நறுக்கிய வெங்காயம், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கினால், இஞ்சிப் பச்சடி தயார்.
மருத்துவப்பயன்: பித்தம், மூட்டு வலி, சளி, இருமல் போக்கும். பசியைத் தூண்டும்.
எள்ளு சாதம்
தேவையானவை: புழுங்கல் அரிசி – 450 கிராம், எள், நெய் – தலா 115 கிராம், காய்ந்த மிளகாய் – 5, உளுத்தம் பருப்பு, முந்திரிப் பருப்பு – தலா 15 கிராம், பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை, எலுமிச்சம்பழம் – அரை மூடி, கறிவேப்பிலை – ஒரு கொத்து, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: அரிசியை சாதமாக வடித்துக்கொள்ளவும். நெய்யை சூடாக்கி, முந்திரி, கறிவேப்பிலையை வறுத்துத் தனியே எடுத்துவைக்கவும். அதே நெய்யில் எள், காய்ந்த மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு போட்டு வறுத்துப் பொடித்துக்கொள்ளவும். நெய், எள்ளுப் பொடி, முந்திரி, கறிவேப்பிலை எல்லாவற்றையும் சாதத்துடன் நன்றாகக் கலக்கினால், எள்ளு சாதம் தயார்!
மருத்துவப்பயன்: ஹார்மோன் குறைபாடால் ஏற்படும் மாதவிடாய்ப் பிரச்னைகளை சரிசெய்து, மாதவிலக்கை ஒழுங்குபடுத்தும். சதைபோட விரும்புபவர்கள் இதை அடிக்கடி செய்து சாப்பிடலாம். எலும்பு தொடர்பான நோய்களைக் குணப்படுத்தும். சளியைப் போக்கும்.வேப்பங்கொழுந்து துவையல்
தேவையானவை: வேப்பங்கொழுந்து – 30 இணுக்கு, வெல்லம் – 10 கிராம், உளுத்தம்பருப்பு – 20 கிராம், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய், புளி, உப்பு, மஞ்சள் தூள் ஆகியவை தேவையான அளவு.
செய்முறை: சிறிதளவு எண்ணெயில் வேப்பங்கொழுந்து, உளுத்தம்பருப்பு, பூண்டை வறுத்து, வெல்லம், பச்சை மிளகாய், புளி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துத் துவையலாக அரைக்கவும்.
மருத்துவப்பயன்: சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற துவையல் இது. பித்தம் தணியும். வயிற்றில் உள்ள கிருமிகள் ஒழியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
Post a Comment