தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுந்தையும், ரவையையும் தனித்தனியே ஊறவையுங்கள். உளுந்தை நன்கு அரைத்து, வழித்தெடுக்கும் சமயம் கோதுமை ரவையை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் அரைத்தெடுங்கள். உப்பு சேர்த்து கரைத்து புளிக்கவைத்து, இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது இந்த இட்லி.
கடலைமாவு இட்லி
தேவையானவை: நன்கு புளித்த இட்லி மாவு - 2 கப், கடலைமாவு - முக்கால் கப், ஆப்பசோடா - ஒரு சிட்டிகை, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், பெருங்காயம் - அரை டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டேபிள்ஸ்பூன், கறிவேப்பிலை - சிறிது, எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்.
மேலே தூவ: கேரட் துருவல், பொடியாக நறுக்கிய மல்லித் தழை, தேங்காய் துருவல் - இவற்றுள் ஏதாவது ஒன்று.
செய்முறை: இட்லி மாவுடன், கடலைமாவு, ஆப்பசோடா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு மணி நேரம் புளிக்கவிடுங்கள். பிறகு, கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து மாவில் கலந்து, இட்லிகளாக ஊற்றியெடுங்கள். சூடாக இருக்கும் போதே, விருப்பப்பட்ட துருவலை மேலே தூவிப் பரிமாறுங்கள். சாப்பிட ருசியாக இருக்கும்
ரவை சேமியா இட்லி
தேவையானவை: ரவை - ஒரு கப், சேமியா - கால் கப், சற்று புளித்த தயிர் - ஒரு கப், தக்காளி சாஸ் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - 2 டீஸ்பூன், நறுக்கிய மல்லித்தழை - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன்.
தாளிக்க: கடுகு - அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், பொடித்த மிளகு, சீரகம் - தலா அரை டீஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு துண்டு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: நெய்யைக் காயவைத்து சேமியா, ரவை இரண்டையும் வறுத்தெடுங்கள். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, தாளிக்கும் பொருட்களை தாளித்து ரவையுடன் சேருங்கள். அத்துடன் மற்ற பொருட்களை சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 10 நிமிடம் கழித்து இட்லிகளாக ஊற்றி வேகவைத்தெடுங்கள்.
இட்லி சட்னி சாண்ட்விச்
தேவையானவை: இட்லி மாவு - 2 கப். சிகப்பு சட்னிக்கு: காய்ந்த மிளகாய் - 10, சின்ன வெங்காயம் - 8, புளி - சிறிய துண்டு, பூண்டு - 2 பல், உப்பு - தேவையான அளவு. பச்சை சட்னிக்கு: மல்லித்தழை - அரை கட்டு, தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பூண்டு - ஒரு பல், புளி - சிறிது, பச்சை மிளகாய் - 3, உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: இட்லி மாவை சற்றுப் பெரிய இட்லிகளாக ஊற்றி வேக வைத்து, கொஞ்சம் பெரிய சதுரத் துண்டுகளாக நறுக்கிக்கொள்ளுங்கள். சிகப்பு சட்னிக்குக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகக் கெட்டியாக அரைத்துக்கொள்ளுங்கள். விருப்பப்பட்டால் அதனுடன் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளலாம். பச்சை சட்னிக்கு, எண்ணெயைக் காயவைத்து, சுத்தம் செய்த மல்லித்தழையுடன் மற்ற பொருட்களை ஒன்றாகச் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கி இறக்கி, அரைத்தெடுங்கள்.
இட்லித் துண்டுகளை எடுத்து, ஒரு இட்லித் துண்டின் மேல் காரச்சட்னி யைத் தடவுங்கள். இன்னொரு இட்லித் துண்டை அதன் மேல் வைத்து பச்சை சட்னியைத் தடவுங்கள். அதன் மேல் மற்றொரு இட்லித் துண்டால் மூடுங்கள். அதன் மேலே உங்கள் விருப்பம் போல, அலங்கரித்துப் பரிமாறுங்கள். விருந்துகளுக்கு ஏற்ற வித்தியாசமான அயிட்டம் இது.
=http://nasrullah.in/ta/30-30/idli.aspx-