BREAKING NEWS

Category 5

Category 6

Category 7

Saturday, November 9, 2013

30 வகை மழை - குளிர் ரெசிபி


மிக்ஸ்டு வெஜ் பக்கோடா


தேவையானவை: கேரட், வெங்காயம், உருளைக்கிழங்கு - தலா ஒன்று, கோஸ் - 100 கிராம், காலிஃப்ளவர் பூக்கள் (சுத்தம் செய்தது) - 10, கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், எண்ணெய், உப்பு, மிளகாய்த்தூள் - தேவையான அளவு.


செய்முறை: வெங்காயம், உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். இதனுடன் கேரட் துருவல், கோஸ் துருவல், காலிஃப்ளவர் துருவல், உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்துப் பிசிறவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து, பிசிறிய காய்றி - மாவு கலவையை பக்கோடா போல உதிர் உதிராக போட்டு பொரித்து எடுக்கவும்.

காய்கறி சாப்பிட மறுக்கும் குழந்தைகள்கூட இதை விரும்பிச் சாப்பிடுவார்கள்.


ஆலூ மசாலா மிக்ஸ் ஃப்ரை


தேவையானவை: உருளைக்கிழங்கு - 5, மைதா மாவு - 10 டீஸ்பூன், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள் - தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  



செய்முறை: உருளைக்கிழங்கை நன்கு கழுவி, தோலுடன் இரண்டாக வெட்டவும். பின்பு ஒவ்வொரு பாதியையும் இரண்டாக நீள வாக்கில் வெட்டவும். மீண்டும் நீள வாக்கில் இரண்டாக வெட்டவும். தண்ணீருடன் உப்பு சேர்த்துக் கொதிக்க வைத்து, உருளைக்கிழங்கு துண்டுகளைப் போட்டு பத்து நிமிடம் வைக்கவும். பிறகு, நீரை வடியவிட்டு காய்ந்த துணியில் கிழங்கு துண்டுகளை பரப்பி துடைக்கவும். துடைத்த உருளை, மைதா மாவு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள் ஆகியவற்றை ஒரு ஜிப்லாக் கவரில் சேர்த்துக் குலுக்கவும். பின்பு, ஒவ்வொரு உருளை துண்டையும் கைகளால் எடுத்து வேறொரு ஜிப்லாக் கவரில் போட்டு மூடி ஃப்ரீசரில் மூன்று மணி நேரம் வைக்கவும். பின்னர் எண்ணெயைக் காய வைத்து, உருளை துண்டுகளைப் பொரித்து எடுக்கவும்.


மல்லி காபி


தேவையானவை:  தனியா - 150 கிராம், சுக்கு - 50 கிராம், மிளகு - 10 கிராம், திப்பிலி - 10 கிராம், சித்தரத்தை - 10 கிராம், சதகுப்பை - 10 கிராம், பனை வெல்லம் - தேவையான அளவு.



செய்முறை: பனை வெல்லம் நீங்கலாக  மற்ற பொருட்களை தனித்தனியே வெறும் வாணலியில் வறுத்து, ஆற வைத்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். இந்தப் பொடியை காற்றுப் புகாத, ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைக்கவும். தேவையானபோது ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரண்டு டீஸ்பூன் பொடி, தேவையான அளவு பனை வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு, இறக்கி வடிகட்டினால்... மணமான மல்லி காபி ரெடி!


குறிப்பு: சித்தரத்தையை நன்கு தட்டி உடைத்த பின் வறுக்கவும்.


மசாலா  பூண்டு பொரி


தேவையானவை: பொரி - ஒரு கப், வேர்க்கடலை - கால் கப், பொட்டுக் கடலை - சிறிதளவு, காய்ந்த மிளகாய் - 2, பூண்டு - 6 பல், மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை, கடுகு, எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.



செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெயைக் காயவிட்டு கடுகு, காய்ந்த மிளகாய் தாளித்து, தோலுடன் பூண்டை தட்டிப் போட்டவும். இதனுடன் மஞ்சள்தூள், பொட்டுக்கடலை, வேர்க்கடலை, பொரி, உப்பு சேர்த்துப் புரட்டி இறக்கவும்.

மழைக்காலத்தில் மாலை நேர சிற்றுண்டியாக வீட்டில் உள்ளவர்களுக்கு இதைச் செய்து கொடுத்தால்... கண் சிமிட்டும் நேரத்தில் காலியாகிவிடும்.


முத்துச் சாரை


தேவையானவை: அரிசி மாவு - ஒரு கப், பொட்டுக்கடலை மாவு, உளுத்த மாவு - தலா ஒரு டீஸ்பூன், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசி மாவுடன் பொட்டுகடலை மாவு, உளுத்த மாவு, உப்பு, சீரகம், எள், பெருங்காயத்தூள், காய்ந்த எண்ணெய் சிறிதளவு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெயை காய வைத்து... பிசைந்து வைத்த மாவை முறுக்கு குழலில் 'ஸ்டார்’ வடிவ அச்சில் போட்டுப் பிழிந்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.


ஐந்து சுற்று கைமுறுக்கு


தேவையானவை: அரிசி மாவு - 10 கப், உளுத்த மாவு - ஒரு கப்,  வெண்ணெய் - ஒரு கப், எள், சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, தேங்காய் எண் ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அரிசி மாவுடன் உப்பு, வெண்ணெய், பெருங்காயத்தூள், எள், சீரகம், உளுத்த மாவு, தேவையான நீர் சேர்த்துப் பிசையவும். கையில் தேங்காய் எண்ணெயைத் தொட்டுக் கொண்டு, மாவை சிறிதளவு எடுத்து, ஆள்காட்டி விரல், கட்டை விரலைப் பயன்படுத்தி, மெல்லிய வெள்ளைத் துணியில் முறுக்காக சுற்றி வைக்க வேண்டும் (5 சுற்று). வாணலியில் எண்ணெயைக் காய விட்டு, சுற்றிய முறுக்குகளை உடையாமல் எடுத்து, எண்ணெயில் போட்டு, நன்கு வேகவிட்டு எடுக்கவும்.


ஸ்பைஸி டீ


தேவையானவை:  சுக்கு - 50 கிராம், சோம்பு - 25 கிராம், புதினா - சிறிதளவு, பனங்கற்கண்டு - 25 கிராம், ஏலக்காய் - 2, லவங்கம் - 2.



செய்முறை: புதினாவை வெயிலில் நன்கு காயவிடவும். சோம்பை வெறும் வாணலியில் லேசாக வறுக்கவும். இவற்றுடன் சுக்கு, ஏலக்காய், லவங்கம், பனங்கற்கண்டு சேர்த்து, மிக்ஸியில் நைஸாக பொடிக்கவும். பின்பு, காற்றுப் புகாத டப்பாவில் சேமிக்கவும்.

டீ தயாரிக்கும்போது ஒரு டம்ளர் டீக்கு கால் தேக்கரண்டி என்ற அளவில் இந்தப் பொடியை டீத்தூளுடன் சேர்த்துத் தயாரிக்கவும்.

இது அஜீரணம், வயிற்றுக்கோளாறு, வாயுகோளாறு ஆகியவற்றில் இருந்து நிவார ணம் அளிக்கும்.


சுக்கு டோஸ்ட்


தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், சுக்குப் பொடி - ஒரு டீஸ்பூன், கேரட் துருவல், தேங்காய் துருவல் - தலா 4 டீஸ்பூன், வெங்காயம் - ஒன்று, கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, பச்சை மிளகாய் - ஒன்று, காய்ந்த மிளகாய் - 3, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.  



செய்முறை: பச்சரிசியை சின்ன ரவை பதமாக மிக்ஸியில் உடைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு... கடுகு, கடலைப் பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப் பிலை தாளிக்கவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் மூன்று கப் தண்ணீர், உப்பு, சுக்குப் பொடி, கேரட் துருவல், தேங்காய் துருவல் ஆகியவற்றை சேர்த்துக் கொதிக்கவிட்டு, அரிசி ரவை சேர்த்துக் கிளறி வேகவிட்டு, கொத்த மல்லித் தழை தூவி இறக்கி ஆற விடவும். இந்தக் கலவையை சிறிய வடைகள் போல தட்டி, தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும்.


பப்பாளி மசாலா சப்ஜி


தேவையானவை: பப்பாளிக்காய், வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, பெருங்காயம், கடுகு, உளுத்தம்பருப்பு - தாளிக்க தேவையான அளவு, பச்சை மிளகாய் - 2, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பப்பாளியின் தோலை சீவி சிறிய துண்டுகளாக்க வும், வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து... நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் பப்பாளித் துண்டுகள், தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்கு வேக விட்டு... உப்பு சேர்த்து கொதிவிட்டு இறக்கவும்.
இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ் ஆக பரிமாறலாம்.


பூண்டு புளிக்குழம்பு


தேவையானவை: பூண்டு - 10 பல், புளி - நெல்லிக்காய் அளவு, சின்ன வெங்காயம் - 5, சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் - தாளிக்க தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - 3 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: புளியை ஊற வைக்கவும். சின்ன வெங்காயம், பூண்டின் தோலை உரித்து, சீரகம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்து... அரைத்த விழுது சேர்த்து வதக்கி, புளியைக் கரைத்து ஊற்றவும். இதனுடன் உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை 'சிம்’மில் வைத்து  குழம்பு கெட்டியான பின்பு இறக்கவும்\\



ஓமவல்லி பஜ்ஜி


தேவையானவை: ஓமவல்லி இலை - 10, கடலை மாவு - ஒரு கப், அரிசி மாவு - அரை கப், பொட்டுக்கடலை மாவு - அரை கப், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கடலை மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு ஆகியவற்றை ஒன்றாக கலந்து... உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு, பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைக்க வும். ஓமவல்லி இலை களை சுத்தம் செய்து, மாவில் தோய்த்து எடுத்து, சூடான எண் ணெயில் பொரித்தெடுக்கவும்.


பாசிப்பருப்பு டோக்ளா


தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், தேங்காய் துருவல் - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு - தாளிக்க தேவையான அளவு, கொத்த மல்லித் தழை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பாசிப்பருப்பை ஊற வைத்து சற்று கரகரவென அரைத்து... உப்பு, சமையல் சோடா சேர்த்துக் கலக்கவும். ஒரு தட்டில் எண்ணெய் தடவி, அதில் மாவைப் போட்டு ஆவியில் வேக வைத்து எடுத்து, துண்டுகளாக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு தாளித்து, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு மாவு துண்டுகள், தேங்காய் துருவல், கொத்தமல்லித் தழை சேர்த்துப் புரட்டி இறக்கினால்... சுவையான பாசிப்பருப்பு டோக்ளா ரெடி!


இஞ்சி  புளி தொக்கு


தேவையானவை: இஞ்சி - 50 கிராம், புளி - நெல்லிக்காய் அளவு, வெல்லம் - சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 3,  கடுகு, பெருங்காயத்தூள் - தாளிக்க தேவையான அளவு, வெந்தயம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: இஞ்சியைக் கழுவி, தோல் சீவி சிறுசிறு துண்டுகளாக்கவும். புளியை ஊற வைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்த பின் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கவும். இதனுடன் புளி, உப்பு சேர்த்து, தேவையான நீர் விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள், வெந்தயம் தாளித்து... அரைத்த விழுது, பொடித்த வெல்லம் சேர்த்து நன்கு சுருள வதக்கி எடுக்கவும்.


கார்ன்ஃப்ளேக்ஸ்  அவல் மிக்ஸர்


தேவையானவை:  கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், அவல், பொட்டுக்கடலை, வேர்க்கடலை - தலா கால் கப், கறிவேப்பிலை - ஒரு ஆர்க்கு, மிளகாய்த் தூள், எண்ணெய், உப்பு, - தேவையான அளவு.



செய்முறை: எண்ணெயைக் காய வைத்து அவல், வேர்க்கடலை, பொட்டுக்கடலை, கறிவேப்பிலை, கார்ன்ஃப்ளேக்ஸ் ஆகியவற்றை ஒவ்வொன் றாக பொரித்து எடுக்கவும். பிறகு, அவற்றை ஒன்றாக்கி... உப்பு, மிளகாய்த் தூள் சேர்த்துக் கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்துப் பயன்படுத்தவும்.


திப்பிலி ரசம்


தேவையானவை: கண்டதிப்பிலி - 10 குச்சிகள், புளி - எலுமிச்சை அளவு,  காய்ந்த மிளகாய் - 4, மிளகு, சீரகம், துவரம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம், நெய் - தாளிக்க தேவையான அளவு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய் - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: கண்டதிப்பிலியை சுத்தம் செய்யவும். கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு திப்பிலி, மிளகு, சீரகம், துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். ஆறிய பின்பு மிக்ஸியில் விழுதாக அரைக்க வும். புளியை ஊற வைத்துக் கரைத்து... மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு, அரைத்த திப்பிலி விழுது சேர்த்து, பொங்கி வரும்போது இறக்கவும். நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.
இது, மழைக்காலத்தில் உடல் நலம் காக்கும் மருத்துவ குணம் கொண்ட ரசம்!


டொமேட்டோ கார சட்னி


தேவையானவை: தக்காளி - 2, வெங்காயம் - ஒன்று, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3, கடுகு -  சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: வெங்காயம், பூண்டு இரண்டையும் தோல் உரித்து பொடியாக நறுக்கவும். தக்காளி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து நநன்கு வதக்கி, ஆறிய பின் மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். கடுகு தாளித்து சேர்த்துப் பரிமாறவும்.


ஜிஞ்சர் பொடி


தேவையானவை:  இஞ்சி - ஒரு பெரிய துண்டு, காய்ந்த மிளகாய் - 3, உளுத்தம்பருப்பு - 4 டீஸ்பூன், புளி - கொட்டைப்பாக்கு அளவு, பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன், வேர்க்கடலை - 3 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவை யான அளவு.


செய்முறை: வேர்க்கடலை, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பை சிறிதளவு எண்ணெய் விட்டு வறுக்கவும். புளி, பெருங்காயம், தோல் சீவி துண்டுகளாக் கிய இஞ்சி ஆகியவற்றை தனியே வறுக் கவும். ஆறிய பின் வறுத்த பொருட்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்து வைக்கவும்
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட... மழைக்காலத்தில் விறுவிறுப்பான சுவை தேடும் நாவுக்கு இதமாக இருக்கும்!


மிளகூட்டல்


தேவையானவை: சின்னதாக நறுக்கிய புடலங்காய் துண்டுகள் - ஒரு கப், பாசிப் பருப்பு - கால் கப், மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், தேங்காய் துருவல் - 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 3, மிளகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து குழைய வேகவிடவும். தேங் காய் துருவலுடன் பச்சை மிளகாய், மிளகு, சீரகம் சேர்த்து நைஸாக அரைக்கவும். புடலங்காய் துண்டுகளை வேக வைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து... கடுகு, கறிவேப்பிலை தாளித்து... வெந்த புடலங்காய், பாசிப் பருப்பு, அரைத்த தேங்காய் விழுது, உப்பு சேர்த்து, நன்கு கொதித்த பின் இறக்கி பரிமாறவும்.



மசாலா நட்ஸ்


தேவையானவை: வேர்க்கடலை - ஒரு கப், முந்திரி - 10, கடலை மாவு, அரிசி மாவு - தலா 2 டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை: அகலமான பாத்திரத்தில் வேர்க்கடலை, ஒன்றிரண்டாக உடைத்த முந்திரி, உப்பு, மிளகாய்த்தூள், கடலை மாவு, அரிசி மாவு சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, விரல்களால் பிசிறி வைக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, மசாலா தடவிய நட்ஸ்களை உதிர் உதிராகப் போட்டு பொரித்து எடுக்கவும்.



மிளகு சால்னா


தேவையானவை: உளுந்து - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 3, புளி - எலுமிச்சை அளவு, மிளகு - 4 டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, பெருங் காயம் - சிறிதளவு, நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன், மஞ்சள்தூள், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:  வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயைக் காய வைத்து உளுந்து, மிளகை வறுத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், பெருங்காயம், புளி சேர்த்து வறுக்கவும். பிறகு, இதை மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். மீண்டும் வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெயை காய வைத்து... கடுகு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுது, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துக் கொதிக்க வைத்து இறக்கி, சூடான சாதத்துடன் பரிமாறவும்.



சன்னா சிப்ஸ்


தேவையானவை: வெள்ளை கொண்டைக்கடலை - ஒரு கப், மிளகாய்த்தூள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



செய்முறை:  வெள்ளை கொண்டைக்கடலையை 8 மணி ஊறவிடவும். பிறகு, நீரை வடியவிட்டு காய்ந்த துணியில் போட்டு, நிழலில் சிறிது நேரம் உலர்த்தவும். வாணலியில் எண்ணெயைக் காயவிடவும். உலர்ந்த கடலையை தட்டி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். கடலையின் மீது உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து கரகரவென பரிமாறவும்.



ஆலு கச்சோரி


தேவையானவை: உருளைக்கிழங்கு - 4, தேங்காய் துருவல் - அரை மூடி, பச்சை மிளகாய் - 4, வேர்க்கடலை (பொடித்தது) - 5 டீஸ்பூன், சர்க்கரை - ஒரு சிட்டிகை, சோள மாவு - 4 டீஸ்பூன், சீரகம் - சிறிதளவு, எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.



செய்முறை: தேங்காய் துருவலுடன் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் அரைக்கவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சீரகம் தாளித்து... அரைத்த தேங்காய் விழுது, உப்பு, சர்க்கரை, பொடித்த வேர்க்கடலை சேர்த்து பூரணம் போல கிளறி, ஆறவிடவும். உருளைக்கிழங்கை வேக வைத்து, தோலுரித்து துருவவும். இதனுடன் உப்பு, சோள மாவு சேர்த்து, சிறிதளவு நீர் விட்டுப் பிசையவும். இந்த மாவில் இருந்து சிறு உருண்டை எடுத்து சொப்பு போல செய்து, பூரணத்தை நடுவில் வைத்து மூடி, தட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.


மூங்தால் ஃபிரிட்டர்ஸ்


தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப்,  கொத்தமல்லித் தழை - கால் கப், பச்சை மிளகாய் - 3, சமையல் சோடா - ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு, பெருங்காயத்தூள் - தேவையான அளவு.



செய்முறை: பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அரைக் கவும். பச்சை மிளகாயைப் பொடி யாக நறுக்கவும். கொத்தமல்லித் தழையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும். அரைத்த பருப்பு விழுது டன் உப்பு, சமையல் சோடா, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய், கொத்தமல்லி சேர்த்துப் பிசையவும், வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, அடுப்பை 'சிம்’மில் வைத்து பிசைந்த மாவை சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு பொன்னிற மாக பொரித்து எடுக்கவும்.



இன்ஸ்டன்ட் அவல் அடை


தேவையானவை: அவல் - ஒரு கப், கடலை மாவு, அரிசி மாவு - தலா 4 டீஸ்பூன், பச்சை மிளகாய் - 5, வெள்ளை எள் - ஒரு டீஸ்பூன், இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், எண்ணெய், கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை, உப்பு - தேவையான அளவு,



செய்முறை: அவலை நன்கு களைந்து பத்து நிமிடம் ஊற வைக்கவும். பிறகு, நீரை வடிய வைத்து உப்பு, இஞ்சித் துருவல், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், எள், கடலை மாவு, அரிசி மாவு, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை சேர்த்துப் பிசையவும். ஒரு வாழை இலை அல்லது பிளாஸ்டிக் கவரில் எண்ணெய் தடவி, பிசைந்த மாவில் இருந்து சிறிதளவு எடுத்து அடையாக தட்டி, சூடான தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் வேக விட்டு எடுக்கவும்.



பிரெட்  பொட்டேட்டோ சாண்ட்விச்


தேவையானவை:  பிரெட் ஸ்லைஸ்கள் - 5, உருளைக்கிழங்கு - 4, எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், வெண்ணெய் - 50 கிராம், கொத்தமல்லித் தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், வெள்ளை எள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.


செய்முறை: உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசிக்கவும். இதனுடன் உப்பு, மிளகாய்த்தூள், கொத்தமல்லித் தழை, எலுமிச்சைச் சாறு சேர்த்து நன்கு பிசையவும். பிரெட் ஸ்லைஸ்களை இரண்டாக முக்கோண வடிவில் வெட்டவும். ஒரு பிரெட் துண்டு மீது சிறிதளவு வெண்ணெய் தடவி, அதன் மீது மசித்த உருளைக்கிழங்கு கலவை சிறிதளவு தடவி, அதன் மேல் வெள்ளை எள்ளை பரவலாக தூவவும். தவாவில் சிறிதளவு வெண்ணெய் விட்டு உருக்கி, உருளை மசாலா தடவிய பிரெட் துண்டை வைத்து, அதன் மீது மற்றொரு பிரெட் துண்டு வைத்து, இருபுறமும் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.



சாபுதானா காராபூந்தி


தேவையானவை: ஜவ்வரிசி - ஒரு கப், மிளகு - 4 டீஸ்பூன், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு,

 


செய்முறை: மிளகை மிக்ஸியில் பொடிக்கவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, ஜவ்வரிசியை பொரித்து எடுக்கவும். பின்பு, கறிவேப்பிலையை  பொரிக்கவும். வேறொரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு... மஞ்சள்தூள், பொரித்த ஜவ்வரிசி, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு, மிளகுத்தூள் சேர்த்துப் புரட்டி எடுத்து, காற்றுப் புகாத டப்பாவில் சேமித்துப் பயன்படுத்தவும்.



கார்ன்ஃப்ளேக்ஸ்  நட்ஸ் சிவ்டா


தேவையானவை: பொரிக்காத கார்ன்ஃப்ளேக்ஸ் - ஒரு கப், வேர்க்கடலை - அரை கப், முந்திரி, திராட்சை - தலா 10, மிளகாய்த் தூள் - ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள், சர்க்கரை - தலா கால் டீஸ்பூன், கடுகு, கறிவேப்பிலை - தாளிக்க தேவையான அளவு, நெய் - 2 டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 
 


செய்முறை: வேர்க்கடலை, கார்ன்ஃப்ளேக்ஸை தனித்தனியே எண்ணெயில் பொரித்து எடுக்கவும். வாணலியில் நெய் யைக் காய வைத்து... கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மஞ்சள்தூள், முந்திரி, திராட் சையை சேர்த்து வறுக்கவும். இதனுடன் உப்பு, சர்க்கரை, மிளகாய்த்தூள், பொரித்த வேர்க்கடலை, கார்ன்ஃப்ளேக்ஸ் சேர்த்துக் கிளறி இறக்கி, சாப்பிடக் கொடுக்கவும்.




ஸ்வீட் அண்ட் சால்ட் பிஸ்கட்


தேவையானவை:  மைதா - ஒரு கப், சர்க்கரை - அரை கப்,  நெய் - 2 டீஸ்பூன், பால் - தேவையான அளவு, எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு, உப்பு - சிறிதளவு.



செய்முறை: மைதா, உப்பு இரண்டையும் கலந்து சலிக்கவும். சர்க்கரையை பொடிக்கவும். ஒரு பாத்திரத்தில் உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்துக் கலக்கவும். அதனுடன் சலித்த மாவு சேர்த்துக் கலந்து, பால் விட்டு பிசையவும். இதை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பிசைந்த மாவை, சிறுசிறு உருண்டைகளாக செய்து சப்பாத்தி போல திரட்டி, விரும்பிய வடிவில் வெட்டி, சூடான எண்ணெயில் பொரிக்கவும்.


பருப்பு  இஞ்சி துவையல்


தேவையானவை: கடலைப்பருப்பு - 4 டீஸ்பூன், தனியா - 2 டீஸ்பூன், தேங்காய் துருவல் - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, புளி, வெல்லம் - சிறிதளவு, கடுகு, பெருங்காயத்தூள், எண்ணெய், உப்பு  - தேவையான அளவு.



செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு... கடலைப்பருப்பு, தனியா, தோல் சீவி நறுக்கிய இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து ஆறவிடவும். இதனுடன் தேங்காய் துருவல், புளி, வெல்லம், உப்பு சேர்த்து துவையலாக அரைத்தெடுக்கவும். கடுகு, பெருங்காயத்தை தாளித்து துவையலில் சேர்க்கவும்.
இதை சாதத்துடன் பிசைந்து சாப்பிட...  ஜீரண சக்தி அதிகரிக்கும்.

அவள்விகடன்






Post a Comment

 
Copyright © 2013 சமையல் குறிப்புக்கள்
Shared by WpCoderX