எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளில் இடியாப்பத்துக்கு மிக முக்கியமான இடம் உண்டு. அதற்காக இடியாப்பத்தையே மீண்டும் மீண்டும் செய்து பரிமாறினால், அலுப்பு தட்டிவிடும் என்பதும் உண்மைதானே! இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவ, இடியாப்பத்தில் 30 வகை சுவையான ரெசிபிகளை இங்கே பரிமாறும் சமையல் கலை நிபுணர் நங்கநல்லூர் பத்மா,
''பருப்பு உசிலி இடியாப்பம், பாஸந்தி இடியாப்பம், டிரைஃப்ரூட் இடியாப்பம் என்று வெரைட்டியாக கொடுத்துள்ளேன்... செய்து பரிமாறி பாராட்டுகளை அள்ளுங்கள்'' என்று உற்சாகமூட்டுகிறார்.
குறிப்பு: 30 ரெசிபிகளுக்கும் இடியாப்பம் தயாரிக்கும் முறை ஒன்றுதான். எனவே, முதலில் சொல்லப்பட்டிருக்கும் இனிப்பு இடியாப்ப ரெசிபியில் இருப்பது போலவே, அனைத்து ரெசிபிகளுக்கும் இடியாப்பத்தைத் தயாரித்துக் கொள்ளவும்.
இனிப்பு இடியாப்பம்
தேவையானவை: வெல்லம், இட்லி அரிசி - தலா 200 கிராம், தேங்காய் துருவல் - ஒரு கப், நல்லெண்ணெய் - ஒரு டீஸ்பூன், ஏலக்காய்த்தூள், உப்பு - சிறிதளவு.
இடியாப்பம் செய்முறை: இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து, மிக்ஸியில் நைஸாக அரைத்து, சிறிது உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைக்கவும். வாணலியில் நல்லெண்ணெயை விட்டு, கரைத்து வைத்து இருக்கும் மாவை ஊற்றி, கெட்டியாகக் கிளறவும் (அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்). மாவு வெந்ததும் நன்கு பிசையவும். மாவை சிறிய பந்து அளவு உருண்டைகளாக உருட்டவும். அகலமான ஒரு பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க வைத்து, உருண்டைகளைப் போடவும் (உருண்டைகள் மூழ்கும் அளவு தண்ணீர் விடவும்). உருண்டைகள் வெந்ததும் எடுத்து, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து கொள்ளவும் (உருண்டைகளை சரிபாதியாக 'கட்’ செய்து பார்த்தால், மாவு வெள்ளையாக தெரியக்கூடாது. அதுதான் சரியான பதம். மாவு தெரிந்தால் மேலும் சிறிது நேரம் வேகவிட வேண்டும்).
செய்முறை: வெல்லத்தைக் கரைத்து கொதிக்கவிட்டு, வடிகட்டி, பாகு காய்ச்சவும். பாகை தண்ணீரில் விட்டு பார்த்தால் உருட்ட வரவேண்டும் இதுதான் சரியான பதம். பாகு ஆறியதும் இடியாப்பத்தை அதில் சேர்த்து... ஏலக்காய்த்தூள், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறவும்.
Post a Comment